Thursday, 10 November 2016

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்



500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கையில் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து தெரிந்து கொள்வோம்..
*
நாடுமுழுவதும் இன்று வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்கள் கைகளில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நாளை முதலே மக்கள் வங்கிகள் அல்லது அஞ்சல் நிலையங்களில் மூலம் மாற்ற முடியும்.

* 500, 1000
ரூபாய் நோட்டுகள் எவ்வளவு மதிப்பில் இருந்தாலும் வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் அவற்றைக்கொடுத்து அதே மதிப்புள்ள வேறு ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். ஆனால் 4,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை மாற்ற முயன்றால், 4,000 ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ளவை வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.‌

*
நோட்டை மாற்றும்போது புதிய 500 மற்றும் 2000 நோட்டுக்களாகவும் பெறலாம். 500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட்டும் செய்யலாம். பணத்தை மாற்றும்போதோ, டெபாசிட் செய்யும்போதோ அடையாள அட்டைகளில் ஒன்று அ‌‌வசிய‌ம். அடையாள அட்டை விவரங்களை வங்கி பதிவு செய்யும். இதற்காக வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள்செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* 500, 1000
ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற கூடுதல் வேலை நேரம் செயல்படவும் வங்கிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றன.‌ 4,000 ரூபாய் என்பது போதாது என்றால், அதற்கு மேற்பட்ட தொகையை காசோலை, இணைய தள வங்கிச் சேவை, டெபிட் கார்டு ஆகிய வழிகளில் செலவிட‌லாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்களிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால், புதிய வங்கிக்கணக்கு தொடங்கி மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.

*
ரிசர்வ் வங்கிக் கிளைகள், தனியார், பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். 4,000 ரூபாய் வரை மாற்ற, எந்த வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தையும் அணுகலாம். அதற்கு மேல் தொகையை மாற்ற, கணக்கு வைத்துள்ள வங்கியை மட்டுமே அணுக வேண்டும்.

*
கணக்கு வைத்துள்ள வங்கியின் எந்தக் கிளையிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். வங்கிக்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள்‌ பிரதிநிதியை அனுப்பி அத்தாட்சிக் கடிதம் தர வேண்டும். பணத்தை செலுத்துபவர் தனது அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

*
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் வழங்குவதற்கான தொழில்நுட்பம் வர சில நாட்கள் ஆகலாம். அதன் பிறகு 18-ம் தேதி வரை நாளொன்றுக்கு அதிகபட்சம் 2,000 ரூபாயும், 1‌9-ம் தேதி முதல் 4,000 ரூபாயும் எடுக்க அனுமதிக்கப்படும். அதன் பிறகு இந்த உச்ச வரம்பு 10,000அதிகரிக்கப்படும்.

*
அதேபோல, வரும் 24-ம் தேதி வரை வங்கிகளில் பணமெடுக்கும் விண்ணப்பத்தில் 10,000 ரூபாய் வரையும், காசோலையில் 20,000ரூபாய் வரையும் மட்டுமேபணம் பெற முடியும். அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரை வழக்கம்போல ஏடிஎம்களில் பணம் டெபாசிட் செய்யலாம்.

*
ரொக்கம் தவிர்த்து, மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. டிசம்பர் 30-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ரயில்நிலையங்கள், விமா‌ன டிக்கெட் ஆகியவை 11-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் ஏற்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் தகவல்கள் உள்ளன. சந்தேகங்கள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலக எண்களான 02‌ -22602201, 22602944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்
.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆதார் எண் இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும்



தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆதார் எண் இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2016-2017 பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பொதுத்தேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வருவதாக தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்ககம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அரசு தேர்வுத்துறை இயக்ககம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது, மாணவர்களின் ஆதார் எண்ணையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இதை வைத்துதான் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள்கொண்டுவரப்படும். ஆதார் எண் இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும். எனவே இந்த மாதத்திற்குள் மாணவர்களிடம் ஆதார் எண்ணை வாங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் தனியார் மற்றும் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் பொதுத்தேர்வு மாணவர்கள் எத்தனை பேர்? இன்னும் எத்தனை பேர் ஆதார் எண் எடுக்கவில்லை என்று கணக்கெடுத்து, அந்த பள்ளிகளுக்கு ஆதார் எடுக்கும் சிறப்பு முகாம் அமைத்து, ஆதார் அட்டை வழங்க கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பணியை இந்த மாதத்திற்குள் முடிக்கவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
.

500,1000 ரூபாய் நோட்டுகள்


1. நவம்பர் 9-ம் தேதி அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.

2.
நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஏ.டி.எம் செயல்படாது.

3.
நீங்கள் கையில் வைத்திருக்கும் ரூபாய் 500, 1000 நோட்டுகளை உங்கள் வங்கி அல்லது தபால் நிலையம் சேமிப்புக் கணக்கில் வைப்பு வைதிருக்க வேண்டும்.

4.
வங்கியிலிருந்து நீங்கள் ஒரு நாளைக்கு 10000 ரூபாய் அல்லது ஒரு வாரத்திற்கு 20,000 தான் எடுக்க முடியும்.

5.
காசோலைகள், வரைவோலைகளை, டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகள் மற்றும் மின்னணு நிதி பரிவர்த்தனைகளுக்கு எந்த தடையும் இல்லை.

அடுத்த 72 மணிநேரங்களுக்கு கீழ்கண்ட இடங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்த முடியும் :

1.
ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர்கள், பஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் பெற தற்போதைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப்    பயன்படுத்தலாம்.

2.
அரசு மருத்துவமனைகளில் பில் தொகைக்கு செலுத்த முடியும்.

3.
மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட  பெட்ரோலிய நிறுவனங்களின் பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில் செலுத்த முடியும்.

4.  
மத்திய மற்றும் மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளில் செலுத்த முடியும்.

5.  
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பால் பூத்களில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

Tuesday, 8 November 2016

எண்ணமே ‘இன்புட்’... கண் இமையே ‘பாஸ்வேர்ட்!’


சென்னை அண்ணா பல்கலையில் சமீபத்தில், ‘நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டேண்டர்ட்ஸ்’ சார்பில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு மாநாடு, இணைய உலகில் நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் காத்திருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வழிகள் பற்றியும் விவாதித்தது.
சைபர் தாக்குதல்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் பணியில் துப்பறியும் நிபுணர்கள் போல ஈடுபட்டிருக்கும் வல்லுநர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஹேக்கர்களும் தங்கள் அனுபவம் மூலம் வியக்க வைத்தனர். மேலும் தொழில்நுட்ப உலகின் எதிர்கால சாத்தியங்களின் கீற்றுக்களையும் அறிய முடிந்தது.
கண் இமையே பாஸ்வேர்ட்
இந்த மாநாட்டில் கணினி வல்லுநர்கள் சதீஷ் அஸ்வின் மற்றும் பிரமோத் குமார் இருவரும் இணைந்து, எண்ணங்கள் மூலம் கம்ப்யூட்டரை இயக்குவது, கண் இமையே பாஸ்வேர்டாக மாறக்கூடிய வாய்ப்பு என எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினர். ‘டீப் ஐடென்டிட்டி’ நிறுவனத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் ஐ.ஓ.டி எனப்படும் ‘இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’ துறை வல்லுநரான பிரமோத் இருவரும் தங்கள் உரையைத் தொடங்கும் முன் மேடையில் சின்னதாகத் தொழில்நுட்ப மாயத்தை நிகழ்த்திக்காட்டினர்.
பிரமோத்துடன் பேசிய படி, அஸ்வின் மேடையில் வைக்கப்பட்டிருந்த ஃபேனை பார்வையாலேயே இயக்கிக் காட்டினார். அப்படியே பார்வையாளர்கள் இருவரை அழைத்து அவர்களின் பார்வையைக் கொண்டே பொம்மை கார் ஒன்றை இயக்கிக் காண்பித்தனர்.
‘இதெப்படி சாத்தியம்?’ என வியந்தவர்களுக்கு தங்கள் தலையில் அணிந்திருக்கும் சென்சார் சாதனம் மூலமே இது சாத்தியமாகிறது என்று குறிப்பிட்டவர்கள், எதிர்காலத்தில் பொருட்கள் மட்டும் அல்ல மனிதர்களும் இணையத்துடன் இணைக்கப்படும் நிலை உருவாகும் என்றும், எண்ணங்கள் மூலமே கம்ப்யூட்டர் உள்ளிட்ட எல்லாவற்றையும் இயக்குவதும் சாத்தியமாகலாம் என்றனர்.
“மூளையின் சிக்னல்களை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் மாற்ற முடியும். கண் இமைப்பதையே பாஸ்வேர்டாக வைத்துக்கொள்வதும் சாத்தியமாகும். கைரேகை போலவே கண் இமைப்பதும் தனித்தன்மை கொண்டது. எனவே, உங்களின் கணினியை வேறு ஒருவர் தன் கண் இமைப்பால் திறக்க முடியாது” என்றார் சதீஷ்.
எண்ணங்களே ‘இன்புட்’..!
ஒருவர் சிந்திப்பதை வைத்தே இ.இ.ஜி கருவி மூலம் எண்ணங்களை கம்ப்யூட்டருக்கான உள்ளீடாக (இன்புட்) மாற்ற முடியும் என்பதை அவர்கள் எடுத்துக் கூறினர். பொம்மை காரை இயக்கியது இப்படித்தான் என்ற பிரமோத் மேலும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“இந்த முறை ‘பிரைன் கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ்’ எனக் குறிப்பிடுகிறது. இதன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே போர் முனையில் யுத்தம் செய்யும் ரோபோவை இயக்கும் சாத்தியம் உள்ளது. மனித மூளை மூலம் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் நிலையில், இங்கு ஹேக்கர்கள் யார் இருப்பார்?” எனும் கேள்வியை எழுப்பினார் பிரமோத். சாதனங்கள் போல மனிதர்களும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகும் நிலை ஏற்பட்டால் திகிலாகத்தானே இருக்கும்?
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் வரிசையில் மனித மூளைதான் ஆறவாது வெளியாக இருக்கும் என்பதே அவர்களின் செய்தியாக இருந்தது.
எங்கே தாக்குதல்?
எதிர்கால சாத்தியங்களும், அபாயங்களும் ஒரு புறம் இருக்க இன்றைய உலகில் நிறுவனங்கள் சைபர் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை ‘ஸ்னேப்டீல்’ நிறுவனத்தின் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி தலைவர் வருண் நாயர் விளக்கினார்.
“சைபர் தாக்குதல்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் தயாராக இல்லாவிட்டாலும் தாக்குதல்கள் நடைபெறும். எனவே எந்த வகைத் தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என்பதையும், அவ்வாறு நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
சைபர் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு சரியான கேள்விகளைக் கேட்க வேண்டும். அப்போதுதான் முக்கிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு முன் நிலைமையை அமைதியாக்கிப் பதற்றத்தைக் குறைக்க வேண்டும். நிறுவனத்தில் உள்ள மற்ற குழுக்களுடன் தொடர்புகொள்ள வேண்டும். தாக்குதலின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த வகையான தகவல்களை எப்படிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். உதாரணத்திற்கு, பல நிறுவனங்களில் ஊழியர்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்ட கோப்புகளை அனுப்பி வைத்துவிட்டு, அதற்கு அடுத்த மெயிலில் பாஸ்வேர்டைப் பகிர்ந்துகொள்கின்றனர். பாதுகாப்பிற்காக பாஸ்வேர்டை உருவாக்கிவிட்டு, அது ஹேக்கர்கள் கையில் சிக்கக்கூடிய வகையில் மெயில் மூலம் அனுப்புவது சரியா? சைபர் பாதுகாப்பில் மனிதர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே ஊழியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
‘கிளவுட் செக்’ நிறுவனத்தைச் சேர்ந்த ராகுல் சசி ஹேக்கராக தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு, பாகிஸ்தான் ஹேக்கர்களின் சதியை அம்பலமாக்கிய முறையை விவரித்தார்.
“ஹேக்கர்கள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரைச் சமூக ஊடகங்களில் குறி வைத்து அவர்கள் மூலம் வலை விரித்து முக்கிய விவரங்களைத் தெரிந்துகொண்டு தாக்குதல் நடத்துகின்றனர்” என்றார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு முயற்சி பற்றி உற்சாகமாகப் பேசியவர், இணையதளப் பக்கங்களை அணுகும் வகையில் உருவாக்கப்பட்ட ‘பாட்’ பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.
‘சிஸ்கோ சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தின் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி இன்வஸ்டிகேட்டர் கே.ஏ.மொன்னப்பா, சைபர் தாக்குதல் விசாரணை மேற்கொள்ளப்படும் வழிகளை விவரித்தார்.
“முதலில் தாக்குதல் நடைபெற்றதற்கான சுவடே இருக்காது. ஊழியர்கள் விஜயம் செய்திருக்கக் கூடிய இணையதளத்தில் உள்ள விஷமத்தனமான விளம்பரம் மூலம் ‘மால்வேர்’, நிறுவன கம்ப்யூட்டருக்குள் வந்து உட்கார்ந்திருக்கும். அல்லது அப்பாவித்தனமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒளிப்படம் பின்னே அது ஒளிந்திருக்கும். அதன் பின் அந்த மால்வேர் மெல்ல தனக்குத் தேவையானத் தகவல்களை ஸ்கேன் செய்யும். இதுவும் வழக்கமான செயல்பாடு போல இருக்கும். மேலும் அது அனுப்பும் தகவல்களும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டிருக்கும். எனவே தாக்குதல் நடைபெற்றதையே கண்டுபிடிக்க முடியாது. எனவே மிகவும் கவனமாகச் செயல்பட்டு அதன் சுவடுகளைக் கண்டறிந்து நீக்க வேண்டும்” என்றார்.
இந்திய அரசின் சைபர் தடயவியல் ஆய்வாளரான சந்தோஷ் காட்சரே, “தாக்குதலுக்கு இலக்கான எஸ்.எஸ்.டி., டிஸ்க்கில் இருந்து தகவல்களைச் சேகரிப்பதில் நிறைய தொழில்நுட்ப சவால்கள் உள்ளன. வழக்கமான டிஸ்க்கின் பணிகளைச் செய்தாலும் அதிலிருந்து மேம்பட்ட இந்த டிஸ்க், சேகரிக்கப்பட்டத் தகவல்கள் அதன் கோப்பு வடிவத்தால் மாயமாக மறைந்து விட வாய்ப்புகள் உள்ளன” என்று விளக்கினார்.
இந்த மாநாடு தந்த ஒரே பாடம் இதுதான்: மால்வேர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது, சந்தேகத்திற்கு உரிய மெயில்களை கிளிக் செய்யாமல் இருப்பது, பாஸ்வேர்டை முறையாகக் கையாள்வது, சமூக ஊடகம் மூலமான வலை விரிப்புக்கு இலக்காமல் இருப்பது போன்ற அடிப்படையான விழிப்புணர்வு அம்சங்கள் நம்மையும், நிறுவனங்களையும், நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்!
இன்று (செவ்வாய்) இரவு 12.00 மணி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் 
நோட்டுகள் செல்லாது

நாட்டுமக்களுக்கு பிரதமர் ஆற்றிய சிறப்பு தொலைக்காட்சி உரையில் அவர் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ''நாடு முழுதும் நவம்பர் 9 மற்றும் 10 முதல் ஏ.டி.எம்.கள் செயல்படாது என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒப்படைத்து மாற்றிக் கொள்ளலாம். ஒப்படைக்க அடையாள அட்டை அவசியம்'' என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

“கருப்புப் பணம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள்தான் கருப்புப் பணத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் கள்ள நோட்டுகளை அடித்து விநியோகித்து வருகின்றனர். ஊழல், கருப்புப் பணம், பயங்கரவாதம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியின் குறுக்கே நிற்கிறது” என்றார் பிரதமர் மோடி.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு: 

* ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு உரிய அடையாள அட்டை காண்பிக்க வேண்டும், உதாரணமாக ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை காண்பித்து பணமாற்றம் செய்து கொள்ளலாம்.
* டிசம்பர் 30-ம் தேதிக்குள் பணத்தை மாற்ற முடியாதவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியில் டிக்ளரேஷன் ஒன்றை அளித்து மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி மார்ச் 31, 2017 வரை உள்ளது. இதற்கும் அடையாள அட்டை அவசியம்.
* நாடு முழுதும் ஏடிஎம்.கள் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் செயல்படாது. 

* பெட்ரோல் நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், சர்வதேச விமான நிலையங்கள், ரயில் டிக்கெட்டுகள் ஆகியவற்றிற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை பயன்படுத்தலாம்.
* சில நாட்களுக்கு ஏடிம்-லிருந்து ரூ.2000 மட்டுமே எடுக்க அனுமதி. இது பிற்பாடு ரூ.4,000 ஆக அதிகரிக்கப்படும்.வங்கி ஏடிஎம்-களிலிருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 வரை எடுக்க அனுமதி உண்டு, வாரத்திற்கு ரூ.20,000 வரை மட்டுமே வங்கி ஏடிஎம்களிலிருந்து பணம் எடுக்க முடியும்.
* இண்டெர் நெட் பேங்கிங், பணம், டிடி நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. 

* நாளை (நவ.9) வங்கிகள் செயல்படாது.
* புதிய ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் புழக்கத்திற்கு வரும்.

*நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக போராட இது ஒரு வாய்ப்பு. இதுவரை பல்வேறு வழிமுறைகளில் ஊழல்வாதிகளிடமிருந்து ரூ.1,25,000 கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம்”

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். போதிய அளவில் மாற்று ரூபாய் நோட்டுகள் கையிருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.