Saturday 2 January 2016

இளங்கோவடிகள்
Image result for இளங்கோவடிகள்

இளங்கோவடிகள் சேரநாட்டிலே வஞ்சி நகரத்திருந்து அரசுபுரிந்த சேரலாதன் என்னும் வேந்தற்கு மைந்தரும் சேரன் செங்குட்டுவற்குத் தம்பியுமாவர். இளங்கோவாகிய இவர் துறவு பூண்டமையால் இளங்கோவடிகள் எனப்பெற்றார். இவர் வஞ்சிமூதூர் மணி மண்டபத்திலே தந்தையுடன் இருக்கும் போது ஆண்டுப்போந்த நிமித்திகனொருவன் இவரை நோக்கி அரசு வீற்றிருக்கும் இலக்கண முண்டென்று சொல்ல, தமையனாகிய செங்குட்டுவனிருக்க இவ்வாறு முறைமை கெடச் சொன்னா யென்று அந்நிமித்திகனை வெகுண்டு நோக்கி, செங்குட்டுவற்குத் துன்பமுண்டா காதபடி குணவாயிற் கோட்டத்திலே துறவுபூண்டு பேரின்பவீடாகிய அரசினை ஆளுதற்குரியவரா யிருந்தனர். இவ்வரலாறு பத்தினிக் கடவுள் தேவந்திமேற் றோன்றித் தம்மை நோக்கி யுரைத்ததாக அடிகள் தாமே வரந்தருகாதையில் (170-83) அருளிச்செய்தமையால் அறியப்படும். செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகட்கும் தந்தை சேரலாதன் என்பதும், தாய் சோழன் மகள் என்பதும் "குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத் துலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மக ளீன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப்பேர் யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்" (வாழ்த்துக்காதை: உரைப்பாட்டு மடை) என்பதனாற் பெற்றாம். செங்குட்டுவன் தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனப்படுவன் என்பதும், தாய் சோழன் மணக்கிள்ளி யெனப்படுவள் என்பதும் "குடவர்கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன் கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற் போகி............கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்னும் பதிற்றுப்பத்தின் (5) பதிகத்தாற் போதரும். அடியார்க்கு நல்லார் "சோழன்றன் மகள் நற்சோணை யீன்ற மக்களிருவருள்" (சிலப்-பதிகவுரை) என்கின்றனர். நற்சோணை யென்னும் பெயர் திரிபுடைத்துப் போலும்.

இவர் இந்நூல் இயற்றுதற்குக் காரணம் இதன் பதிகத்து முற் பகுதியால் விளங்கும். துறவு பூண்ட பின்னரே இஃது இவரால் இயற்றப்பட்டது. இவர் இவ்வரலாறு நிகழ்ந்த காலத்திருந்தவராதலால் காவிரிப்பூம் பட்டினத்திலும், மதுரையிலும் நிகழ்ந்தவற்றை அறிந்தோர்வாய்க் கேட்டும், வஞ்சி நகரத்திலும் வட நாட்டிலும் நிகழ்ந்தவற்றை நேரிற் கண்டும் கேட்டும் இதனை இயற்றினாராவர். அடிகள் இதனோடு தொடர்புள்ளதாகிய மணிமேகலை துறவை இறுதியிற் பாடியமைத்து இக்காப்பியத்தை முடிக்கக் கருதியிருந்தாரெனவும், கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலை என்ற பெயரால் அதனைச் செய்து முடித்தனரெனக் கேட்டு அவ்வாறு செய்யாது விடுத்தன ரெனவும் அடியார்க்கு நல்லார் நலிந்துரை கூறுவது பொருந்துவதன்று. இந்நூலிறுதியிற் காணப்படும் 'நூற்கட்டுரை' யென்பது பின்னுளோர் யாரோ எழுதிச்சேர்த்ததாகுமாதலின், அதில் வந்துள்ள "மணிமேகலை மேலுரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்" என்னுந் தொடர்கொண்டு அங்ஙனங் கூறுதல் சரீலாதென்க. அங்ஙனம் மணிமேகலை வரலாற்றை இறுதியில் விரித்துரைப்பின் இக்காப்பிய வமைதி சிதைதல் ஒருதலை.


சமயம் :-- "செஞ்சடை வானவ னருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்" (26: 98-9) எனவும், "ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்" (30 : 141-2) எனவும் போந்தவற்றால் செங்குட்டுவனுடைய பெற்றோர் சிவனருளாலே அவனை மகனாகப்பெற்றன ரென்பதும், "நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலை யொடுபுனைந், திறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங்கொண்டு" (26: 54-7) எனவும், "ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன், சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத், தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத் தாங்கின னாகி" (26 : 62-7) எனவும் போந்தவற்றால் செங்குட்டுவன் சிவபிரானை யன்றிப் பிறிதொரு தெய்வத்தையும் முடியால் வணங்காத சிவபத்தி மாண் புடையனென்பதும் பெறப்படுதலின் அவனுக்குத் தம்பியாகிய இவரது சமயமும் சைவமே யாதல்வேண்டும். "குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த" (சிலப்.பதி) என்புழி, அடியார்க்கு நல்லார் கோட்டம் என்பதற்கு அருகன் கோயில் என்று பொருள் கூறியது அடிகள் என்னும் பெயர் சைன சமயத் துறவிகட் குரியதென்னும் கருத்தினாற் போலும்? அடிகள் என்பது இறைவனுக்கும் அவனடி யார்க்கும் வழங்கும் பொதுப்பெயராவதன்றி, அருக சமயத் துறவிகளையே குறிப்பதொன்றன்றாகலானும், இளங்கோவடிகள் "பிறவா யாக்கைப் பெரியோன்" (5 : 169) எனவும், "உலகுபொதி யுருவத் துயர்ந்தோன்" (26 : 53) எனவும் கவியின் கூற்றிலேயே சிவபிரானை முழுமுதற் பொருளாகப் பாராட்டுதலானும் அவர் சைவ சமயத்தினரென்பதே துணிபு. சைன சமயக்கொள்கை சிலவும், அருகதேவன். வாழ்த்தும் கவுந்தியடிகளின் சார்புபற்றியே இதன்கண் இடம்பெற் றுள்ளமை காண்க. அடிகள் சைவ சமயத்தினராயினும், அருகன், கொற்றவை, திருமால், செவ்வேள் என்னும் தெய்வங்களை அவ்வத் தெய்வங்களைப் பரவும் அடியார்களின் உணர்ச்சியோடு கலந்து நின்று பாடியுள்ளமை பெரிதும் பாராட்டற்குரியது.

அங்ஙனம் யாதொரு சமயத்திலும் வெறுப்பின்றி எல்லாச் சம யங்களையும் மதித்துப் பாடியிருப்பதும், தமது சேரர் குடியினராகிய வேந்தர்களின் உயர்ச்சியைப் போலவே ஏனைச் சோழ பாண்டிய வேந் தர்களின் உயர்ச்சியையும் ஒரு பெற்றியே பாராட்டியிருப்பதும் இவருடைய நடுவுநிலையையும் மனத்தூய்மையையும் நன்கு புலப் படுத்துகின்றன.

அடிகள் இக் காப்பியத்தை முடிக்குமிடத்து, இதனைத் தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் என உலகமாந்தரை விளித்து, 'பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்' என்பது முதலாக, 'செல்லுந் தே எத்துக்கு உறுதுணை தேடுமின்' என்பது ஈறாக உரைத்துள்ள அறங்கள் மன்பதையெல்லாம் அறநெறியி லொழுகித் துன்பத்தி னீங்கி இன்பமெய்த வேண்டுமென்னும் இவரது ஆர்வத்தையும் இரக்கத்தையும் புலப்படுத்துகின்றன.

 காலம்; -- இதன் பதிகத்திறுதியில், "உரையிடை யிட்ட பாட்டு டைச் செய்யு, ளுரைசா லடிக ளருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன், கேட்டனன்" எனவும், மணிமேகலையின் பதிகத் திறுதியில் "இளங்கோ வேந்த னருளிக் கேட்ப, வளங்கெழு கூல வாணிகன் சாத்தன், மாவண் டமிழ்த்திற மணிமேகலை துறவு, ஆறைம் பாட்டினு ளறிய வைத்தனனென்" எனவும் கூறப்பட்டிருத்தலானும், கடைச் சங்கப் புலவராகிய சீத்தலைச் சாத்தனாரே மணிமேகலை யாசிரியரென் பது போராசிரியர் முதலியோர் கருத்தாகலானும், சேரன் செங்குட்டு வனைச் சங்கப் புலவராகிய பரணர் பதிற்றுப்பத்திற் பாடியிருத்தலா னும் இளங்கோவடிகள் காலம் கடைச் சங்கப் புலவர் காலமெனத் துணியப்படுகின்றது.

செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் இயற்றிக் கண்ணகிக்கு விழாக் கொண்டாடிய காலத்து இலங்கை யரசனாகிய கயவாகு வென்பவன் உடனிருந்தானென்று வரந்தரு காதையாலும், அக் கய வாகுவும் இலங்கையிற் கண்ணகிக்குக் கோயில் கட்டுவித்து விழாக் கொண்டாடினா னென்று இந்நூலின் முன்னுள்ள உரைபெறு கட் டுரையாலும் தெரிதலானும், இலங்கையிற் கயவாகு வென்னும் அர சன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தானென இலங்கைச் சரிதத்தால் அறியப்படுதலானும் அதனை யடுத்த.காலமே இளங்கோவடிகள் இந்நூலை யியற்றிய காலமாகும். இலங்கை வரலாற்றில் மற்றொரு கயவாகு கூறப்படினும் அவன் மிகவும் பிற்காலத்தின னாதலின், கண்ணகிக்கு விழாக் கொண்டாடிய வன் முதற் கயவாகுவேயா மென்க.