Sunday, 30 August 2015

விவேகானந்தர்

நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் - விவேகானந்தர்


இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்கள் ஆக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்தாக வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை. தனி மனிதனுக்குப் பொருந்தும் இந்த உண்மை நாடுகளுக்கும் பொருந்தும். தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.த அற்ப இதயமுடைய மனிதர் களிடமிருந்து எந்த உருப்படியான வேலையை நீ எதிர்பார்க்க முடியும்? நீ கடலைக் கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மனவுறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கு இருக்க வேண்டும்.
* சிந்தனையின் 90 சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும்தவறு செய்வதில்லை.
* எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத் தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருகசக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய்ய வேண்டும்.
* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை
மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தையே நிரப்பு. அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இது தான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவானாக விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.
* இவனை நம்பு. அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன்- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. <உன்னைப் பற்றி முதலில் அறிந்து கொள். எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீஅந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ சாதிக்கப் பிறந்திருக்கிறாய். உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் போராடினால், பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகிவிடும்.
* உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே! உன் மனமே உனக்கு நீதிபதி. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.
* நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடின மானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனதுலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
* எதிலும் கவனம் வேண்டும்
பேச்சு பேச்சாக இருந்தாலும், நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் இருந்து கவனம் சிதறிவிடக்கூடாது என்று பெரியவர்கள் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம். இது விவேகானந்தரின் விஷயத்தில் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அவரது நிஜப்பெயர் நரேந்திரன் என்னும் நரேன். இவரது தாயார் புவனேஸ்வரி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து கதைகளையும், நீதிகளையும் மகனுக்கு எடுத்துச் சொல்வது வழக்கம். இதனால் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் சிறுவனாக இருந்தபோதே நரேன் உறுதியாக இருந்தார். ஒருநாள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் ஆர்வத்துடன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு பாடத்தைக் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட ஆசிரியர் நரேனை எழுப்பி, நடத்திய பாடத்திலிருந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தார். ஆனால், சற்றும் தயங்காமல் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தான் சிறுவன் நரேன்.
""நீ பேசிக் கொண்டிருந்தாய் என்று தவறாக எண்ணி விட்டேனே! உண்மையில் இவ்வளவு நேரம் வகுப்பில் பேசிக் கொண்டிருந்தது யார்?'' என்று கேட்டு மற்ற மாணவர்களைப் பார்த்தார் ஆசிரியர்.
நரேன் ஆசிரியரிடம், ""ஐயா! இவ்வளவு நேரம் பேசியது நான் தான்! இருப்பினும், பாடத்தில் இருந்தும் என் கவனம் விலகவில்லை'' என்று உண்மையைச் சொன்னார். ஒரு பணியில் கவனம் செலுத்தும்போது, மற்றொன்றைக் கேட்கும் நிலை வந்தால், அதிலும் கவனம் இருக்க வேண்டும், புரிகிறதா?
* துணிச்சலும் வேண்டும் கருணையும் வேண்டும்
விவேகானந்தரின் வீடு அருகில் உடற் பயிற்சிக் கூடம் ஒன்று இருந்தது. அங்கே நண்பர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பெரிய கனமான மரக்கட்டையை சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து உயரமான இடத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களால் அக்கட்டையை அசைக்கக் கூட முடியவில்லை. இதைக் கவனித்த மாலுமி ஒருவர் சிறுவர்களுக்கு உதவ முன்வந்தார். ஆனால், மரக்கட்டை நழுவி மாலுமியின் தலையில் விழுந்து விட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் மயக்கமடைந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி சிறுவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். விவேகானந்தர் தன்னுடைய வேட்டியைக் கிழித்து காயத்தில் கட்டுப் போட்டதோடு அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார். பெரியவர்களை உதவிக்கு அழைத்து மருத்துவரிடம் காண்பிக்க ஏற்பாடு செய்தார். ஆபத்தான நேரத்தில் துணிவோடும், கருணையோடும் செயல்படவேண்டும் என்பது நரேனின் இயல்பான சுபாவமாக இருந்தது
* வெளிநாட்டு சகோதரன்
பேராசிரியர் ரைட் என்பவர் சுவாமி விவேகானந்தருக்காக, சிகாகோவில் நடந்த சர்வ மத மகாசபை மாநாட்டில் பேச அனுமதிக்கும் சிபாரிசு கடிதம் ஒன்றினைக் கொடுத்திருந்தார். சிகாகோவுக்குச் சென்றதும், தன்னிடம் இருந்த சிபாரிசு கடிதம், சர்வமத மகாசபை இருக்குமிடம், செலவுக்கு இருந்த பணம் உட்பட அனைத்தையும் விவேகானந்தர் தொலைத்து விட்டார். குளிரும் பசியும் விவேகானந்தரை வாட்டியது. எங்கு செல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். செல்வந்தர்கள் வாழும் சிகாகோவில் ரோட்டோரத்தில் அமர்ந்து விட்டார். அவரைக் கண்ட ஆங்கிலேயப் பெண்மணி மிசஸ் ஹேல் விவேகானந்தரிடம் வந்து விஷயங்களை அறிந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன் கணவர் ஜார்ஜ் ஹேல் உதவியுடன் சர்வ மத மகாசபையில் பேசும் சொற்பொழிவாளர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்தார். ஜார்ஜ் ஹேல் குடும்பம், தனக்கு ஒரு சகோதரனைப்போல அன்பு பாராட்டி உதவி செய்ததாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.