Tuesday, 10 November 2015

தீபாவளி


தீபாவளித் திருநாள்


ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசியன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்னும் இத்தெய்விகப் பண்டிகை, தீபாலங்காரப் பண்டிகையாக மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படுகிறது.
நெடுங்காலமாகவே சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று.நம்நாட்டின் பற்பல பகுதிகளிலுள்ள பற்பல மக்களாலும் பற்பல விதத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இந்துக்கள் மட்டுமன்றி ஜைனர், பௌத்தர், சீக்கியர் ஆகியோரும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஞான நூல்களுள் “பகவத் கீதை” சிறப்பான இடத்தைப் பெறுவதைப்போல தீபாவளி, பண்டிகைகளுள் உயர்ந்த இடத்தைப் பெறுவதால் இதனை ஆசார்ய சுவாமிகள் “பகவத் கீதையின் தம்பி” என்று சொல்லியுள்ளார்கள்.
தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடுவதால் இப்பண்டிகைக்குத் தீபாவளி என்று பெயர் ஏற்பட்டது.
நம் தமிழ்நாட்டில் கார்த்திகைக்கு மட்டும்தான் விளக்கேற்றி வைப்பதாகக் கொண்டுள்ளோம். ஆனால் வட நாட்டினர் தீபாவளிக்கும் விளக்கேற்றி வைத்து வெகு விமரிசையாய்க் கொண்டாடுகின்றனர்.
லக்ஷ்மி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லக்ஷ்மி பூஜை செய்வதால் செல்வம் வளரும் என்பது நம்பிக்கை.
தீபாவளி நன்னாளன்று லக்ஷ்மி பூஜை செய்த பின்பு புதுக் கணக்கு எழுதுவர். கணக்குப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு மலர் தூவுவார்கள். பின்பு பூஜை செய்வார்கள். செல்வம் லக்ஷ்மியின் பேரருள் என்பது அடிப்படையான நம்பிக்கை. பிறகுதான் வியாபாரம் தொடங்குவார்கள்.
இப்பொன்னாள் அன்று வைகறையில் துயிலெழுந்து, எண்ணெய் தேய்த்து நீராடிப் புத்தாடை உடுத்தி வாண வேடிக்கைகளை வெடித்து சந்தோஷமாக இருக்க வேண்டும்.
தீபாவளி தினத்தன்று, “என்ன கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று கேட்பது இன்றும் நம்நாட்டில் புழக்கத்தில் இருந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் சூரியோதயத்துக்கு முன் இத்தினத்தில் எந்த தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்துக் குளித்தாலும் புனித கங்கையில் நீராடிய பலன் நம்மை வந்து சேருகிறது என்று சொல்லப்படுகிறது. சாதாரண நாள்களில் சூரியோதயத்துக்குப் பின்புதான் தைல ஸ்நானம் செய்யவேண்டும்.
“தைலே லக்ஷ்மி: ஜலே கங்கா” என்பது துலாபுராணத்தின் மணியான வாசகம்.
தீபாவளி அன்று லட்சுமி எண்ணெயிலும், கங்கை வெந்நீரிலும் இருப்பதாக ஐதீகம். சிலர் காசிக்குச் சென்று கங்கையில் ஸ்நானம் செய்வார்கள். தீபாவளி அமாவாசை காசியில் மிகவும் விசேஷம்.
இத்திருநாள் தோன்றுவதற்கான முக்கிய காரணங்களைப் புராணத்திலிருந்து காணலாம்.
தேவர்களுக்கும், தவசிகளுக்கும் அடுக்கடுக்காகத் தொல்லைகளைக் கொடுத்து வந்தவன் நரகாசுரன் என்பவன். அந்த அரக்கனைக் கண்ணபிரான், சத்திய பாமாவின் துணை கொண்டு சம்ஹாரம் செய்த நாளைத் தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
நரகாசுரன் பரந்தாமனால் தண்டிக்கப்பட்டதும், பூமா தேவியானவள் கண்ணபிரானின் பாதகமலங்களைப் பணிந்து, “சுவாமி! நீங்கள் வராஹ சொரூபியாக எழுந்தருளியபோது நமக்குப் பிறந்தவன்தான் நரகாசுரன். தேவரீர் இவனுக்கு ஞானோபதேசம் செய்து மோக்ஷம் அளித்து அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தாள். எம்பெருமானுக்கு பிராட்டியார், ரத்தின குண்டலங்களும், வன மாலையும் கௌஸ்துப மணியும், பீதாம்பரமும், வெண் கொற்றக் குடையையும் காணிக்கையாகச் சமர்ப்பணம் செய்தாள். மகனின் மரண நாளை மற்றவர்களின் மங்கல நாளாகத் திகழப் பிரார்த்தித்த அன்னையின் அருளைத் தான் என்னென்பது?
பூமா தேவியின் பிரார்த்தனைப்படி எம்பெருமான், நரகாசுரனுக்குப் பேரருள் புரியத் திருவுள்ளம் கொண்டார்.
நரகாசுரன் நெஞ்சம் குளிர, மெய்யுருக பெருமானின் செங்கமலச் சேவடிகளைச் சேர்த்து, “சர்வலோக ரக்ஷகா! பரந்தாமா! துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலரே! அராஜகம் புரிந்தவனுக்கு அபயம் அளித்தருள வந்த கருணைக் கடலே! நான் மறையும் இந்நாளை அனைவரும் தங்கள் நன்னாளாகக் கொண்டாட வேண்டும். இத்தினத்தை சுபதினமாக-ஞானத் திருவாக-குவலயத்தில் கருணை வர்ஷித்த வசந்த நாளாகக் கொண்டாட வேண்டும். மக்கள் வைகறையில் துயிலெழுது எண்ணெய் தேய்த்துக் கங்கை நீராட வேண்டும். எண்ணெயில் அன்னையின் அம்சமும் கங்கையில் தேவரீருடைய திருவடியின் கருணைப் பிரவாகமும் பொங்க வேண்டும். தூய வஸ்திரம் தரித்து அறுசுவை அமுதுண்டு, விளக்கேற்றி விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். தேவரீர் சக்ராயுதத்தால் என் கோட்டைகளைப் பிளந்த ஓசையின் எதிரொலியாக மக்கள் அனைவரும் வெடிச் சப்தத்துடன் இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.” என்றெல்லாம் பலவாறு பிரார்த்தித்து, பரந்தாமன் திருவடியில் சரணாகதியானான்.
கேட்ட வரம் தந்தருளும் திருமாலும் அவனை ஆட்கொண்டருளினார். நரகாசுரனுக்கு மோக்ஷம் கொடுத்ததால் இப்பண்டிகையை நரக சதுர்த்தசி என்றும் கூறுவர்.
கண்ணபிரானுக்கும் நரகாசுரனுக்கும் நடந்த யுத்தத்தில் கண்ணபிரான் தேர்த் தட்டில் மயக்கமுற்றார். சாரதியாக வந்த சத்தியபாமா வீரத்துடன் போராடினாள். அதனால் இப்பண்டிகை வீரலக்ஷ்மியைப் போற்றி வணங்கும் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
அஞ்ஞானத்தின் ஸ்தூலவடிவம் தான் நரகாசுரன். அந்த இருளைப் போக்குவதற்கு ஞான தீபங்களை ஏற்றுகிறோம் என்பது வேதாந்தக் கருத்து.
இந்தத் தீபாவளிப் பண்டிகை ஏற்படுவதற்கான காரணம் பற்றி மேலும் பலபுராணக் கதைகள் சொல்லப்படுகின்றன.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். மந்தரமலை, கடையும் போது அப்படியும் இப்படியுமாக ஒரு நிலையில் நில்லாமல் அசைந்தது. அது சமயம் ஸ்ரீமந் நாராயணன் கூர்மாவதாரம் எடுத்து, கடலுள் மூழ்கி, மலையின் அடியில் சென்று, அதனைத் தம் திருத்தோள்களிலே தாங்கி நின்றார்.
அப்பொழுது திருப்பாற்கடலிலே தாமரை மலரின் மீது எழுந்தருளினாள் லக்ஷ்மி. அந்த லக்ஷ்மியைக் கண்டு ஸ்ரீமந் நாராயணன். திருப்பாற் கடலிலுள்ள “திலத்தீபம்” என்னும் இடத்தில் மறைந்து கொண்டார். இதனைக் கண்டு கொண்ட பிராட்டியாரும் அத்தீவிற்கு வந்தாள்.
நாராயணன், பிராட்டியார் வருவதனைக் கண்டு, அங்குமிங்கும் ஓடினார். தேவியும் ஓடினாள். இப்படியாக இருவரும் நடத்திய இந்த அற்புதத் திருவிளையாட்டில், அத்தீவிலுள்ள எள் செடிகளிலுள்ள எள்ளெல்லாம் எண்ணெயாகி விட்டது.
“திலம்” என்றாள் எள். திலம் நிறைந்துள்ள காரணத்தினால் தான் அத்தீவிற்கு “திலத்தீபம்” என்ற பெயரே உண்டாயிற்று.
இறுதியில் ஸ்ரீதேவி, எம்பெருமானுக்கு மாலையிட்டாள். அந்நாளே தீபாவளி நன்னாள். இவ்வாறு எள் தீவில் லீலைகள் புரிந்த பெருமானின் வைபவத்தைக் கொண்டாடுவதற்காகவே எள்ளெண்ணெய் தேய்த்துக் குளிப்பதாகக் கூறப்படுகிறது.
எம்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு பாதாள லோகம் சென்ற மகாபலி சக்கரவர்த்தி எம்பெருமானிடம் ஆண்டிற்கு ஒருமுறை தாம் பூலோகம் வரவேண்டும் என்றும் அந்த நாளில் பூலோக வாசிகள், புத்தாடை உடுத்தி, எங்கும் விளக்கேற்றி கோலகலத்துடன் தன்னை வரவேற்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அந்த நாள்தான் தீபாவளி என்றும் கூறப்படுகிறது.
இந்தத் தீபாவளிப் பண்டிகையை முதலில் கொண்டாடியவன் நரகாசுரனின் மைந்தன் பகதத்தன் என்றுதான் கூற வேண்டும். தந்தை இறந்த தினத்தில் கண்ணபிரானுக்கும் அவனுடைய இராஜ கன்னிகைகளுக்கும் பெரும் வரவேற்பளித்தான். எண்ணெய் தேய்த்து, கங்கை நீராடி பட்டு வஸ்திரம் தரிக்கச் செய்தான். வாண வேடிக்கைகளாலும், வண்ண விளக்குகளாலும் அரண்மனையை அலங்கரித்தான். அதே போல் அனைவரையும் கொண்டாடச் செய்தான்.
கண்ணபிரான் அவனது பக்தியைப் பாராட்டி அவனது “ப்ராக்ஜயோதிஷம்” என்ற பட்டணத்துக்கு பகதத்தபுரம் என்ற திருநாமம் சூட்டினார். அந்நகரம் தான் தற்போதைய “பேக்டாட்.”
சந்திர குப்த விக்ரமாதித்தன் தீபாவளி திருநாள் அன்று அரியணையில் அமர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. அது காரணம் பற்றியே விக்ரம சகாப்தம் ஏற்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டில் அரசாண்ட முகலாய மன்னர் அக்பரின் அரசவைப் புலவர் ‘அபுல் பாஸல்’ என்பவர் ‘அக்பர் பாதுஷா’ தீபாவளி பண்டிகையில் கலந்து கொண்டதாகக் குறித்துள்ளார். தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கும் பழக்கம் முகலாய வம்சத்தைத் தோற்றுவித்த பாபர் காலத்திலிருந்து ஏற்பட்டதாக அறிகிறோம்.
இத்தினத்தில் கதிரவன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு துலாம் ராசியில் நுழைகிறான். மராத்தியர்கள் இந்நாளைத் தாம்பூலம் அணியும் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.
பிரகலாதனுடைய பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாளே தீபாவளி என்றும் அந்நாளில் ஒளியூட்டப்படும் தீபமே ‘யமதீபம்’ என்றும் வாமனபுராணம் இயம்புகிறது. தியாக மூர்த்தியான மகாபலியை இத்திருநாளில் வழிபடுவது பண்டைய இந்து மன்னர்களின் வழக்கம் என்பதை வரலாற்றுச் சான்றுகள் அறிவிக்கின்றன. இன்றும் வடநாட்டில் சில பகுதிகளில் மகாபலியின் உருவத்தைச் செய்து தீபாவளி அன்று வழிபாடு செய்கின்றனர்.
இந்துக்கள் மட்டுமன்றி ஜைனரும் தீபாவளி தினத்தைக் கொண்டாடுகின்றனர். அம்மதத்தின் பெருந் தலைவரான வர்த்தமான மகாவீரர் பரிநிர்வாணம் எனப்படும் வீடு பேறு அடைந்த நாளையே தீபாவளியாகக் கருதுகின்றனர். அந்தத் தவஞானப் பெரு ஒளி விலகியதால் உண்டான இருள் நீங்கும் பொருட்டு தீபங்களை ஏற்றி, இருள் நீக்கும் பண்டிகையாகத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
சீக்கிய மதத்தை சிறுவிய குருநானக் தேவர் பூதவுடலைத் துறந்து புகழுடம்பு அடைந்ததும், அவர் வழியில் வந்து குரு கோவிந்தர் முகம்மதியருக்கு எதிராக போர் புரிய ‘கல்சா’ என்னும் சமய அமைப்பை ஏற்படுத்தியதும் ஆதிசங்கரர் ஞான பீடங்களை ஸ்தாபித்ததும், ஆரிய சமாஜ இயக்கத்தின் தந்தையான சுவாமி தயானந்த சரஸ்வதி இப்பூவுலகை விட்டு நீங்கியதும் இத் தீபாவளித் திருநாளன்றே ஆகும்.
ஸ்ரீஇராமபிரான் வனவாசத்தை முடித்துக்கொண்டு சீதையோடும் லக்ஷ்மணனோடும் அயோத்திக்குத் திரும்பி அரியணை அமர்ந்த நன்னாள் இத்தீபாவளித் திருநாளாகும். அன்றைய தினம் அயோத்தி மாநகரமே வண்ண விளக்குகளால் ஜகத்ஜோதியாகப் பிரகாசித்தது. பதினான்கு ஆண்டுகள் இருள் சூழ்ந்திருந்த அயோத்தி, ஞான தேவனான ஸ்ரீஇராமனின் வருகையால் பிரகாசம் பெற்றது. சீதை கௌசல்யா தேவியின் மனம் மகிழ பொன் விளக்குகளை அரண்மனை முழுவதும் ஏற்றி வைத்தாள். அதுவே தீபாவளி ஆனது என்றும் சிலர் கூறுவர்.
ஐப்பசி மாதத்தில் த்ரயோதசி-சதுர்த்தசி-அமாவாசை-சுக்கில பிரதமை ஆகிய நான்கு நாள்கள் தீபாவளியோடு தொடர்பு கொண்டுள்ள நாள்களாகும். அமாவாசையையும் பிரதமையையும் பிரதானமாகக் கொண்டு வடநாட்டவர் தீபாவளியைக் கொண்டாடுவர். தென்னகத்தில் திரயோதசியையும் சதுர்த்தசியையும் முதன்மையாகக் கொண்டு நடைபெறுவது தீபாவளி.
தீபாவளி தினத்தன்று வரும் அமாவாசையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிரேஷ்டமான ஒன்றாகும். கங்கா ஸ்நானம் செய்து இத் தீபாவளி பண்டிகையை சந்தோஷமாகக் கொண்டாடுவதால் ஆத்ம திருப்தி ஏற்படும். கருணையும் ஞானமும் பிறக்கிறது.
வடநாட்டில் தீபாவளியை ஐந்து நாள்கள் கொண்டாடுவர். முதல் நாள் லக்ஷ்மி பூஜை. இரண்டாம் நாள் நரக சதுர்த்தசி. மூன்றாம் நாள் தீபம் ஏற்றுவது. நான்காம் நாள் முழுக்கு. ஐந்தாம் நாள் யமனை வழிபடுவது.
யமனுக்கு யமுனை என்ற தங்கை உண்டு. யமன் அவளுக்குப் பரிசுகள் வழங்குவானாம். அதனால் அன்று அண்ணன், தங்கையுடன் சேர்ந்து உணவருந்த வேண்டும். தங்கைக்கு ஆபரணம் செய்து கொடுப்பர். வயதானவர்கள் யமுனா நதியில் ஸ்நானம் செய்வார்கள்.
வைணவக் கோவில்களில் தீப அலங்காரம் நடைபெறும். வங்காளத்தில் லக்ஷ்மிக்கு பதிலாக காளியை வழிபடுவார்கள். தீபாவளியின் போது இளம் பெண்கள் தீபங்கள் ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவர். அவை அமிழ்ந்து விடாமலும் அணையாமலும் மிதந்து செல்ல வேண்டும். இல்லாவிடில் அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்காது என்பது நம்பிக்கை.
தீபாவளியின் போது வடநாட்டினர் மாடுகளையும் எருதுகளையும் கன்றுகளையும் குளிப்பாட்டி திலகமிட்டு அலங்காரம் செய்வர். தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் போதுதான் இப்படி செய்வார்கள்.
வியாபாரிகள் தீபாவளியை விக்ரமாதித்தனின் நினைவாகக் கொண்டாடுகிறார்கள்.
ஜைனர்கள் தீபாவளியை மகாவீரர் நிர்வாணமடைந்த தினமாகக் கொண்டாடுவர்.
இராஜஸ்தானத்தில் தீபாவளி விசேஷமாகக் கொண்டாடப்படும். பெண்கள் உடல் முழுவதும் நகைகள் அணிந்து கொள்வார்கள். பண்டைக் கால எனாமல் நகைகளை இன்றும் காணலாம். வண்ண வண்ண உடை உடுத்தி நடனமாடுவர். இராஜபுதன வீரர்கள் இராமரை வழிபடுவர். மத்தியப் பிரதேசத்தில் மலை ஜாதியினர் மற்றும் ஆதிவாசிகள் தீபாவளியை நூதனமாகக் கொண்டாடுவர்.
தீபாவளியின் போது சில இடங்களில் குபேர பூஜை நடைபெறும். குபேரன் அளகாபுரி அரசன். அளவற்ற செல்வம் படைத்தவன். இந்திரனுக்குப் பொக்கிஷதாரன். அவனை ஆராதித்தால் எப்போதும் பணத்தட்டுப்பாடு ஏற்படாது என்பது மக்களின் நம்பிக்கை. குபேரனை நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளி நாட்டவரும் ஆராதிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா, ஜப்பான், ஜாவா, இந்தோனேஷியா, இந்தோசீனா, தென் அமெரிக்கா முதலிய நாடுகளில் குபேர பூஜை உண்டு. ஜப்பானில் அவனுக்குப் பெயர் குபேரா. கிரேக்க நாட்டில் அவன் பெயர் கபெய்ராஸ்!
தீபாவளியின் போது பெண்கள் வண்ண வண்ணக் கோலம் இடுவார்கள். இதற்கு ரங்கோலி என்று பெயர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ரங்கோலிக் கலை சிறப்பாக உள்ளது. ஆதியில் யாக சாலைகளையும் வேள்விக் குண்டங்களையும் ரங்கோலி கோலமிட்டு அலங்கரித்ததாக புராணம் கூறுகிறது. கோபிகள் கிருஷ்ண பரமாத்மாவுடன் கோலத்தில் களித்தனர். அதனால் பெண்கள் இந்தக் கலையைக் கற்றனர்.
ரங்கோலி சிறப்பாக வரையப்படுவது, வங்காளம், குஜராத், மஹாராஷ்டிரம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலாகும். வங்காளத்தில் இதற்கு ‘அல்பனா’ என்று பெயர்.
மூன்று வர்ணம் கொண்டது. அவை வெள்ளை, மஞ்சள், கோக்கோ வர்ணங்களாகும். இராஜஸ்தானத்தில், இவற்றிற்கு ‘மந்தனாஸ்’ என்று பெயர். லக்ஷ்மியை வரவேற்பதற்காக வரைவதாகும்.
குச்சியில் துணி கட்டி கோடுகள் போடுவர். குஜராத்தில் ‘ரங்கோலி’ என்று பெயர். ஸத்யாள் என்றும் கூறுவர். மஹாராஷ்டிரத்தில் இவற்றை ‘ரங்கபல்லி’ என்று அழைக்கின்றனர். தமிழ் நாட்டில் ‘கோலம்’ என்றும் ஆந்திர மாநிலத்தில் ‘முக்குலு’ என்றும் கர்நாடகத்தில் ‘ரங்கோலி’ என்றும் கூறுவர்.
நமக்கு ஏற்படும் துக்கத்தையும் துயரத்தையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் லோகம் க்ஷேமமாகவும், சாந்தமாகவும் இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் எண்ண வேண்டும். அப்படிப்பட்ட நல்ல பக்குவமான மனோநிலையைத் தந்தருள வேண்டும் என்று எம்பெருமானிடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த உண்மைத் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி சகல மங்களங்களையும் பெறுவோமாக!