Wednesday 11 November 2015

குடிநீரை நன்கு காய்ச்சி குடிங்க...!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள், குடிநீரைநன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகமும், குடிநீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் முழுவதும் மூன்று நாட்களாக மழை கொட்டித் தீர்த்துள்ளது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி, சுகாதாரத்திற்கு சவால்விடும் வகையில் உள்ளது.இதுபோன்ற நேரங்களில், குடிநீரில் கழிவுநீர் கலப்பதோடு, குடிநீர் மாசு படவும் வாய்ப்பு உள்ள. அதனால், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:பொதுவாக, குடிநீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து குடிப்பது நல்லது. அதுவும், மழைக்காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தரமற்ற குடிநீர், நோய் பாதிப்புகளுக்கு காரணம் என்பதால், பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும். வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில், குளோரின் அளவை பரிசோதிக்கவும், மாதிரிகள் எடுத்து பாதிப்பு உள்ளதா என கண்டறியவும், உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவும், சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்