திருவள்ளுவர் தினம் வந்தது எப்போது?
திருவள்ளுவர். திருக்குறளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்தவர். அவர் எப்போது பிறந்தார் என்பது குறித்து பல் வேறுபட்ட கருத்துக்கள் நிலவிவருகின்றன. அணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலைப் புகுத்தி குறுகத்தரித்த குறள் என்ற பெருமை கொண்டது திருக்குறள்.
திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 16-ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவள்ளுவராண்டு எப்போது துவங்கியது, திருவள்ளுவர் எப்போது பிறந்தார் உள்ளிட்ட தகவல்களை தருகிறார் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர்க.சுப்ரமணியம்.
தமிழாண்டு: காலம், மிகவும் இன்றியமையாதது. வள்ளுவர் காலம் அறிதல் என்று ஒரு அதிகாரமே வரைந்துள்ளார். இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம்எனப் பொதுவாகக் காலத்தை பிரிப்பர். முக்காலமும் உணர்ந்த ஞானி என்று அழைக்கப் பெறுவது அனைவரும் அறிந்த ஒரு தொடர்.
குடும்பம், ஊர், நகர்உலகம், சமுதாயம் பற்றிய நிகழ்வுகளைக் கணக்கிட காலம் இன்றியமையாத ஒன்று. நமது முன்னோர் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை,ஊழி என வரையறை செய்துள்ளனர். 60 நாழிகை கொண்டது ஒரு நாள். நாளை வைகறை, காலை,நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் எனப் பிரித்தனர். ஆண்டை இளவேனில், முதுவேனில, கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறு பகுதிகாளாகப் பிரித்தனர்.
தொடர் ஆண்டுமுறை நம் நாட்டில் வழக்கத்தில்இல்லை. 60 ஆண்டுகளான பிரபவ முதல் அட்சய வரை இடையில் புகுந்த ஆண்டுகள். இவை தமிழாண்டுகள் இல்லை.
திருவள்ளுவர் ஆண்டு: பிரபவ ஆண்டு முறையில் தமிழ் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு அழிவும், இழிவும் உண்டானதை எண்ணிப் பார்த்து நுண்ணறிவுடையஅறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிஆராய்ந்தனர். திருவள்ளுவர் இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் எனவும், அவர் பெயரில் தொடராண்டைப் பின்பற்றுவது சாலச் சிறந்தது என்றும்,அதையே தமிழாண்டு எனக் கொள்வது என்றும் முடிவுகட்டினர். இந்த முடிவை அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டு பின்பற்றத் தொடங்கினர்.
மேற்கண்ட முடிவைச் செய்தவர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார். தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணிணியப்பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார்., நாவலர் சோம சுந்தர பாரதியார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவர்.
திருவள்ளுவர் ஆண்டின் முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமை ஏழும் - வழக்கில் உள்ளவை.
திருவள்ளுவரின் காலம் கி.மு. 31. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2001+ 31 = 2032. இப்பொழுது திருவள்ளுவர் ஆண்டு2032 ஆகும். தைத் திங்களில் தான் உழவர்களின் விளை பொருள் களஞ்சியத்துக்கு வருகிறது. பொருளாதாரத் திட்டம் வகுக்கும் காலம் தை. கிராமத்தினர் - ஊர்ச்சொத்தை குத்தகைக்கு விடும் காலமும் தை திங்களே ஆகும்.
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 முதல் ஏற்று 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர்ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.