| ||||
உதைத்த காலுக்கு முத்தம் | ||||
ஒரு நாள் காலை ராஜசபை வழக்கம்போல் கூடியது. அக்பர் சபையோர்களை பார்த்து கேட்டார். “நேற்று நள்ளிரவில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. யாரோ ஒருவன் என் படுக்கையில் ஏறி, எனது மார்பில் எட்டி உதைத்து எழுப்பினான். யாரென்று பார்ப்பதற்குள் ஓடிவிட்டான். அவனை கண்டுபிடித்தால் என்ன தண்டனை கொடுக்கலாம்?”
இதைக் கேட்ட சபையோரின் ரத்தம் கொதித்தது. ஒவ்வொருவரும் எழுந்து கடும் தண்டனைகளை தெரிவித்தார்கள். எல்லாமே மரண தண்டனையில்தான் முடிந்தது.பீர்பால் மட்டும் சிந்தனையில் மூழ்கி இருந்தார். அக்பர் அவரை நோக்கி “பீர்பால், நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே, உங்கள் கருத்து என்ன?” என்றார்.
பீர்பால் சொன்னார், “சர்க்கரவர்த்தி அவர்களே உங்களை உதைத்த காலுக்கு தங்கம், வைடூரிய கொலுசு செய்து போட்டு முத்தமழை பொழியுங்கள்.”
“என்ன கொலுசும், முத்தமுமா?” என்று சபையே திகைப்புடன் பார்த்தது.
“ஏன் அப்படி சொல்கிறீர்கள்?” அக்பர் கேட்டார். “மன்னா, தங்கள் படுக்கை அறையில் இவ்வளவு கட்டுக்காவல்களை மீறி நள்ளிரவில் நுழைவது என்றால் யாரால் முடியும்? அதுவும் உங்கள் மார்பில் ஏறி உதைத்துவிட்டு ஓட வேண்டும் என்றால், அது நமது குழந்தை இளவரசனால்தானே முடியும். அவருக்கு கொலுசும், முத்தமும்தானே சிறந்த பரிசு!” என்று விளக்கினார் பீர்பால்.அவரது மதியூகத்துக்கு அவை தலைசாய்த்தது.
|