தனியார் மருத்துவ கல்லூரிகள் தேர்வு நடத்த அனுமதியில்லை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு
தேசிய நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லாமல், ‘ரேங்க்’ அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மருத்துவ கவுன்சில் ஆதரவு
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில் தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘மாநில அரசுகள் தங்கள் நடைமுறைப்படி, மாணவர் சேர்க்கையை நடத்த இந்த ஆண்டு மட்டும் அனுமதி அளிக்கலாம். ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளிக்க கூடாது’ என்று தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘‘மாநில அரசுகளும் தேசிய நுழைவுத்தேர்வை ஏற்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி வருகிறார்கள். எனவே, இதுகுறித்தும் முதல்கட்ட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வை எழுத அனுமதி அளிப்பது குறித்தும் கருத்து தெரிவிக்க வரும் 10-ம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘‘தேசிய நுழைவுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை.
மாநில அரசுகள் தற்போது பின்பற்றி வரும் நடைமுறைப்படி, இந்த ஆண்டு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்படும். மத்திய அரசு பதில் தெரிவித்தபின் இதில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.