இஸ்ரோவின் புதிய எல்லைகள்!
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு ஏவு விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ), வெற்றிகரமாக ஏவி சோதித்துப் பார்த்ததன் மூலம், தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவு விண்கலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து திங்கள் கிழமை காலை விண்ணில் ஏவப்பட்டது.
ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் சென்ற ஏவு வாகனம் 770 விநாடிகள் பறந்து, பிறகு வங்காள விரிகுடாவில் விழுந்தது. 65 கி.மீ. உயரத்தை எட்டிய இக்கலம், அதன் பிறகு பூமியின் வளிமண்டலத்தில் ஒலியின் வேகத்தைப் போல ஐந்து மடங்கு வேகத்தில் நுழைந்திருக்கிறது. செயற்கைக் கோள்களை விண்வெளியின் சுற்றுவட்டப் பாதையில் கொண்டுபோய் நிறுத்துவதற்காக, பல முறை இந்த ஏவு விண்கலங்களைப் பயன்படுத்துவதற்கான சோதனை இது.
இந்த ஏவுகலம் பறக்கும்போது வளிமண்டலம் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் நிலவும் மாறுபட்ட தட்ப-வெப்ப நிலையைத் தாங்கும் இதன் தன்மையும், எங்கு தரையிறங்க வேண்டும் - எப்படி இறங்க வேண்டும் என்ற கட்டளைகளை ஏற்று இது எப்படிச் செயல்படுகிறது என்பதும் சரிபார்க்கப்பட்டிருக்கிறது.
விண்ணில் செலுத்த வேண்டிய செயற்கைக் கோள்கள் போன்றவை பொருத்தப்படும் பகுதியைச் சுற்றி வெப்பம் தாக்காத வகையில் வெப்பந்தாங்கி ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் பலமுறை சோதனை செய்த பிறகே இதை வணிகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். இதற்குச் சுமார் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை ஆகலாம்.
முழுமையாகவும் விரைவாகவும் விண்வெளிக்குச் சென்று சேதமில்லாமல் திரும்பும் ஏவு வாகனத்தைப் பயன்படுத்த முடிந்தால், செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு ஆகும் செலவில் 80% குறைந்துவிடும். உலகின் பிற விண்வெளி நிறுவனங்களைவிட, இஸ்ரோ மிகக் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்கிறது என்ற நற்பெயர் கிடைத்திருக்கிறது. இப்போது விண்வெளிப் பயணங்களுக்கு ஆகும் செலவில் பெரும்பகுதியை ராக்கெட்டுகள்தான் எடுத்துக்கொள்கின்றன. ராக்கெட்டுகள் உந்துவிசையோடு, விண்ணுக்கு எடுத்துச் செல்ல விரும்பும் பொருட்களைக் கொண்டுசெல்கின்றன. அப்படிச் செல்லும்போது எரிபொருளை எரித்து அதில் கிடைக்கும் ஆற்றல் மூலம் உயரத்தை எட்டுகின்றன. இப்படிக் குறிப்பிட்ட பணியைச் செய்து முடித்த பிறகு புவியின் வளிமண்டலத்துக்குத் திரும்பும்போது எரிந்து அழிகின்றன.
இந்த ஆய்வில் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா செய்த தவறுகளைத் தவிர்க்க இஸ்ரோ விரும்புகிறது. அமெரிக்காவின் ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனம் அனுப்பிய ‘பால்கன்’ஏவு விண்கலத்தைப் போல் அல்லாது முழுமையாக மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தக்கூடிய ஏவு விண்கலத்தைத் தயாரிக்கவே இஸ்ரோ முயற்சி செய்வதாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் கே.சிவன் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கத் தயாரிப்பு மாதிரியானது, குறைந்த எடையில் செயற்கைக் கோள்களை அல்லது விண்வெளி வீரர்களைத்தான் விண்ணில் அனுப்பவல்லது. அதாவது, செயற்கைக் கோள்களின் எடையோ, விண்வெளி வீரர்களின் எண்ணிக்கையோ அதிகமானால் எரிபொருள் அளவையும் அதற்குப் பொருத்தமாகக் கூட்ட வேண்டும். இதனால் செலவு அதிகரிக்கும். தனது சோதனையைத் தொடர்ந்தால் 25 அல்லது 30 சோதனை முயற்சிகளுக்குப் பிறகு இஸ்ரோவுக்கு வெற்றி கிட்டும். இஸ்ரோ இதில் முழுமையான வெற்றி பெற வாழ்த்துவோம்!