Sunday, 20 December 2015

dn

இதயம்: ஆபரேஷன்தான் தீர்வா?

"நல்ல வாட்டசாட்டமான ஆளுங்க; 10 பேர் சுத்தி நின்னு அடிச்சாலும் மனுசன் அசர மாட்டாரு. ஆனா நேத்து காலையிலேயே பாருங்க, திடீருனு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லிருக்காரு. பொண்டாட்டி தண்ணி கொண்டு வரதுக்குள்ள ...
"நல்ல வாட்டசாட்டமான ஆளுங்க; 10 பேர் சுத்தி நின்னு அடிச்சாலும் மனுசன் அசர மாட்டாரு. ஆனா நேத்து காலையிலேயே பாருங்க, திடீருனு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லிருக்காரு. பொண்டாட்டி தண்ணி கொண்டு வரதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு'.

இதுபோன்ற உரையாடலை அக்கம் பக்கத்தில் கேட்டிருப்போம். ஆம். நிச்சயமாக இது திடீர் மாரடைப்புதான் (Massive Heart Attack). முன்பெல்லாம் 50 - 60 வயதில்தான் மாரடைப்பு வரும். ஆனால் இப்போது காலம் மாறிப்போச்சு. 30 வயதிலேயே மாரடைப்பு வருது. என்ன, ஏதுன்னு கேட்பதற்குள்ளேயே உயிர் பிரிந்துவிடுகிறது.

சரி, இப்படி அறிகுறியே இல்லாமல் ஆளைச் சாய்த்துவிடும் மர்மம் என்ன?இதைத் தடுக்க வழியே இல்லையா. எல்லாருமே இப்படி மாரடைப்பால் இறப்பது இல்லையே. அப்படியானால் யாருக்கு வரும். யாருக்கு வராது. இது போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் எழும்.

உண்மைதான். எல்லோருக்கும் மாரடைப்பு வருவதில்லை. ஆனால் வயதாக, வயதாக மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் அதிகமாகின்றன. தற்போது 30 - 40 வயதிலேயே மாரடைப்பு வருவதற்கு முக்கியக் காரணம். வாழ்க்கை முறை மாற்றம் (Life Style Change) , கட்டுப்பாடில்லாத, ஒழுங்கற்ற உணவுப் பழக்க வழக்கம்.

புதிது, புதிதாக பல நோய்கள். புதிது புதிதாகப் பிரச்சினைகள். தொழில் வளம் பெருகி; நகரங்கள் விரிவடைந்து, நகரத்தின் தாக்கம் கிராமங்களுக்கும் சென்றுவிட்டன. இதனால் வாழ்க்கை முறை மாறியது. அதன் விளைவு சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் இதய நோய், சர்க்கரை நோயாளிகள் அதிகம்.

மாரடைப்பு வருவது ஏன்? உடல் உறுப்புகள் இயங்க சத்துப் பொருள்களும் ஆக்ஸிஜனும் தேவை. ஆக்ஸிஜனையும் சத்துப் பொருள்களையும் உடல் முழுவதும் எடுத்துச் செல்லும் பணியை ரத்தம் செய்கிறது.

இந்த ரத்தத்தை உடல் முழுவதும் அனுப்பும் பணியை இதயம் செய்கிறது. இப்படி உடல் உறுப்புகளுக்கெல்லாம் ரத்தத்தை அனுப்பும் இதயத்துக்கும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு வந்து இதயம் செயலிழக்கிறது.

இதயத் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்களில் (Coronary artery) கொழுப்புப் படிந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இதுதான் பொதுவான காரணம் என்றாலும் கடுமையான ரத்த சோகை, ரத்தம் உறைவதற்கான பிளேட்டலட்டுகள் அதிகரித்தல். நோய்க் கிருமித் தாக்குதலால் கரோனரி ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைதல். இதய வால்வு பாதிப்புகள், வால்வு பாதிப்பினைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய இதயப் பெருக்கம், தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவையே காரணம்.

அடிப்படைக் காரணங்கள்: உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல், ரத்த நாள உட்சுவர்களில் கொழுப்புத் திவலைகள் பெருமளவில் படிதல், புகைப் பழக்கம், பாரம்பரியம், முதுமை, உடலுழைப்பற்ற வேலை, நோய்க் கிருமித் தாக்குதல், மதுப் பழக்கம், உளைச்சல் நிறைந்த வாழ்க்கை ஆகியவைமாரடைப்பு வருவதற்கானகாரணங்கள்.


எந்த வயதில் வரும்? மாரடைப்பு எந்த வயதிலும் வரலாம். சிறுவயதில் கூட வர வாய்ப்புள்ளது. இருப்பினும் பெரும்பாலும் நடுத்தர வயது மற்றும் முதுமையில்தான் மாரடைப்பு வருகிறது. பாரம்பரியத்தன்மையால் இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

பெண்களுக்குக் குறைவு: ஹார்மோன் சுரப்பு காரணமாக மாதவிடாய்க் காலம் வரை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவு. ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு ஆண்களைப் போலவே பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கரோனரி ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் சதவீதத்தைப் பொருத்து மருந்து மட்டும் போதுமா அல்லது அறுவைச் சிகிச்சை தேவையா என்பது தீர்மானிக்கப்படும். ஆஞ்சியோகிராம் சோதனை மூலம் இதய கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை உறுதி செய்துவிட முடியும்.

அடைப்பின் அளவைப் பொருத்து சிகிச்சை: இதய கரோனரி ரத்தக் குழாயில் உள்ள அடைப்பைப் பொருத்து என்ன சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது. அடைப்பு 70 சதவீதத்துக்கு மேல் இருக்கும் நிலையில் பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்வதே சிறந்தது.

ஆஞ்சியோகிராம் மூலம் பாதிப்பின் அளவைக் கண்டறிந்து, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையையும் செய்துவிட முடியும். ஆனால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்தாலும் மீண்டும் அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பலூன் சிகிச்சை: கதீட்டர் குழாய் மூலம் பலூனை உள்ளே செலுத்தி ரத்தக் குழாயில் அடைப்பு உள்ள இடத்தை விரிவடையச் செய்வதே ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையாகும். இதில் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. அடைப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும் நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து "ஸ்டெண்ட்' என்ற சிறு உலோக அமைப்பை இதய கரோனரி ரத்தக் குழாயில் பொருத்தும் சிகிச்சையும் நடைமுறையில் உள்ளது. இச் சிகிச்சைக்கு "ஆஞ்சியோபிளாஸ்டி-ஸ்டெண்ட்' என்று பெயர்.

கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு குறைவாக இருந்தால்...: கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு குறைவாக இருக்கும் நிலையில் உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை தேவையில்லை. மருத்துவ சிகிச்சை மூலம் இதயத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து வர முடியும்.

பைபாஸ் அறுவைச் சிகிச்சை என்றால் என்ன? நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடைபடும்போது வாகனங்களை மாற்று வழியில் (பை பாஸ்) திருப்பிவிடுவதுபோல இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது மாற்று வழியில் ரத்தத்தை அனுப்புவதே "பை பாஸ்' இதய அறுவைச் சிகிச்சை ஆகும்.

ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை, ஸ்டெண்ட் எல்லாம் தாற்காலிக நிவாரணம். ரத்தக் குழாய் அடைப்புக்கு பை - பாஸ் அறுவைச் சிகிச்சை மட்டுமே நல்ல தீர்வாக அமையும். பை -பாஸ் அறுவைச் சிகிச்சை என்றாலே ஆபத்தானது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. தற்போது நாள்தோறும் ஏராளமான பை -பாஸ் அறுவைச் சிகிச்சைகள் நடந்த வண்ணம் உள்ளன. அறுவைச் சிகிச்சைக்குப் பின் மற்றவர்களைப் போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியும். டாக்டரின் அறிவுரைக்கு ஏற்ப வேலைகளைச் செய்யலாம். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம்.

ஹார்ட் ஃபெலியர்: சரி இதுவரை மாரடைப்பு - அதற்குரிய சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பார்த்தோம். இனி, இதயம் செயலிழத்தல், அதாவது ஹார்ட் ஃபெய்லியர் குறித்து பார்ப்போம். அதென்ன ஹார்ட் அட்டாக் - ஹார்ட் ஃபெய்லியர் என பிரித்துச் சொல்கிறீர்கள். இரண்டும் ஒன்றுதானே என நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இரண்டும் ஒன்றல்ல.


இதயம் செயலிழத்தல்: இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலையையே இதயம் செயலிழத்தல் (Heart failure) என்கிறோம். இதயத்தின் செயல்திறன் குறைவதால் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை அனுப்ப முடியாமல் திணறுகிறது.

பொதுவாக முதுமையில்தான் ஹார்ட் ஃபெய்லியர் வர வாய்ப்புள்ளது. அதுதவிர ருமாட்டிக் காய்ச்சலால் இதய வால்வு பாதிக்கப்படுவது. உயர் ரத்த அழுத்தம், கரோனரி ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது உள்பட வேறு சில காரணங்களாலும் இதயத்தின் பம்பிங் திறன் குறைந்துவிடுகிறது.

இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்லும் கரோனரி ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வரும் என்றுதானே பார்த்தோம். அடைப்பு இருந்தால் சிலருக்கு இதயம் செயலிழக்கும்.
ரத்தம் இதய தசைகளுக்கு வராமல் போவதால், தசை நார்கள் செயலிழந்து ஹார்ட் ஃபெய்லியர் ஏற்படுகிறது. கார்டியோ மையோபதி என்று கூறப்படும் இதயத் தசைகளில் ஏற்படும் தொய்வு நோய் காரணமாகவும் ஹார்ட் ஃபெய்லியர் ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இதயத்தின் மிகச் சிறு ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு இதய அறைகள் விரிவடைந்து கார்டியோ மையோபதி ஏற்படுகிறது.

அறிகுறிகள்: ஹார்ட் ஃபெய்லியர் ஏற்பட்டால் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். அதிகமாக மூச்சு வாங்கும். மாடிப் படிகளில் ஏறும்போது அதிகமாக மூச்சு வாங்கினால் உஷாராகிவிட வேண்டியதுதான். நுரையீரலில் ரத்தம் தேங்கும்போதுதான் மூச்சுத் திணறல் வருகிறது. நுரையீரலில் ரத்தம் தேங்கும்போது அங்கே ரத்த அழுத்தம் அதிகமாகிறது.

ரத்த அழுத்தத்தின் காரணமாக சிறு ரத்தக் குழாய்கள் வெடிக்கின்றன. இதனால் இருமும்போது சளியுடன் ரத்தமும் வருகிறது. மேலும் நுரையீரலில் ரத்த அழுத்தம் அதிகமாகும்போது அங்கு ஆக்ஸிஜன் - கார்பன் டை ஆக்ûஸடு மாற்றம் தடை படுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

பிறவியிலேயே கோளாறு (Congenital Heart Disease): தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே சில குழந்தைகளுக்கு இதய வால்வில் ஓட்டை அல்லது கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
அறிகுறிகள் என்ன? இதய வால்வுக் கோளாறு இருந்தால் மூச்சு இரைப்புஅதிகமாக இருக்கும். கை, கால்களில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சோர்வு அதிகமாக இருக்கும்.

ஸ்டெதஸ்கோப் கண்டுபிடித்து விடும்: இதய வால்வு ஓட்டை இருந்தால் அல்லது கசிவு இருந்தால் ஸ்டெதஸ்கோப்பை வைத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும். பெரிய கருவிகள், சோதனைகள் தேவையில்லை.

இதயத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைத்துக் கேட்டாலே கோளாறைக் கண்டுபிடித்துவிட முடியும். இதயத்தில் வித்தியாசமான ஓசை கேட்டால் கோளாறு இருப்பதாக அர்த்தம். உடனடியாக இதய சிறப்பு மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

சிகரெட் பிடித்தால் NO TREATMENT: புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ள நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பது இல்லை என்பதில் டாக்டர் பாஷி உறுதியாக உள்ளார். ""புகை இதயத்துக்குப் பகை. என்னதான் சிறப்பாக சிகிச்சை அளித்தாலும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் உரிய பயன் இல்லாமல் போய்விடும்.

எனவே என்னிடம் வரும் நோயாளிகளிடம் நான் கேட்கும் முதல் கேள்வி, புகை பழக்கம் உண்டா என்பதுதான். அப்படி இருந்தால் அதை முதலில் கைவிட்டு வாருங்கள். அப்புறம் சிகிச்சை அளிக்கிறேன் என்று நிபந்தனை விதிப்பேன்.

சிலர் ஆபரேஷனுக்காக சிறிது நாள்கள் விட்டுவிட்டு மீண்டும் சிகரெட் பிடிப்பார்கள். சிகரெட் பிடிக்கிறார் என எனக்கு எப்போது தெரியவந்தாலும் உடனடியாக சிகிச்சையை நிறுத்திவிடுவேன். எனது நேரமும் வீண்; உங்களது நேரமும் வீண் என்று சொல்லிவிடுவேன்'' என்றார் டாக்டர் பாஷி. சபாஷ் டாக்டர்.

* புகைப் பழக்கம் காரணமாக இளம் வயதிலேயே மாரடைப்பு வரும்.

* குடும்பத்தில் யாராவது மாரடைப்பு காரணமாக இறந்திருந்தால், மற்றவர்கள் 30 வயது முதல் ஆண்டுக்கு ஒரு முறை இதயப் பசோதனை செய்து கொள்வது நல்லது.

* "வாக்கிங்' செல்வதன் மூலம் உடலுக்கு நல்ல கொழுப்புச் சத்து (எச்.டி.எல்.) கிடைக்கும்.