Thursday, 5 November 2015

மாணவர்களுக்கு காய்ச்சலா?

மாணவர்களுக்கு காய்ச்சலா? தகவல் தெரிவிக்க அறிவுரை

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் 
இருப்பின், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் 
தெரிவிக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில்
 பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளால், 
பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். காய்ச்சல் அறிகுறியுடன்
 சில மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், தொற்று கிருமிகளால், 
டெங்கு, பன்றிக்காய்ச்சல் சக மாணவர்களுக்கும் எளிதாக பரவி 
விடுகிறது. இதனால், பள்ளி தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வுடன் 
செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளியிலுள்ள நீர் தேக்க பகுதிகள், குப்பைகளை அகற்றி 
சுத்தமாக பராமரிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வுகளை, 
மாவட்ட கல்வி அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காய்ச்சலால் பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் மாணவர்கள் 
குறித்தும், தொடர் காய்ச்சல், கடுமையான சளி, இருமல், உடல் 
நிலையில் மாற்றம் போன்ற அறிகுறிகளுடன் பள்ளிக்கு மாணவர்கள் 
வந்தால், சக மாணவர்களிடம் இருந்து மாணவனை தனிமைப்படுத்தி
 அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் தெரிவிக்க 
வேண்டும் என கூறப்பட்டுள்ளது.