இந்திய பிரிட்டிஷ் உறவுகள் -நூறாண்டுக்கும் மேலான வரலாறு
இந்தியப் பிரதமர் மோடி பிரிட்டன் வந்துள்ள நிலையில், இந்திய பிரிட்டன் உறவுகளைப் பற்றி இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் இயக்குநர் ராப் லின்ஸ் எழுதும் ஒரு கண்ணோட்டம்
நூறாண்டுகளுக்கும் மேலான காலம் பகிரப்பட்ட வரலாறு மற்றும் இப்போது எதிர்காலம் குறித்தும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு பார்வை என, பிரிட்டிஷ் இந்திய உறவு பலமானதாகவே இருக்கிறது.
கடந்த 2010லிருந்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், இந்தியாவுக்கு மூன்று முறை சென்று வந்திருக்கிறார். பிரிட்டனின் ராஜதந்திர வலையமைப்பு இந்தியாவில்தான் உலகிலேயே மிகப் பெரிய அளவானதாக இருக்கிறது.
பரஸ்பர முதலீடுகள் வளர்ந்திருக்கின்றன. கூட்டு முயற்சிகளில் புதிய உத்வேகம் இருக்கிறது.
இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் என்று பார்த்தால் பிரிட்டன் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அதே போல திட்டங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அமெரிக்கா மற்றும் பிரான்ஸுக்கு அடுத்தபடியாக, இந்தியாதான் பிரிட்டனுக்குள் நேரடியாக முதலீடு செய்த மூன்றாவது வெளிநாடு.
பிரிட்டன் இந்தியாவிலிருந்து அதிகரித்துவரும் அளவில் பொருட்களை இறக்குமதி செய்கிறது. ஆனால் பல ஆண்டுகள் வளர்ச்சிக்குப் பிறகு, பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதிகள் சமீப காலத்தில் குறையத் தொடங்கியிருக்கின்றன.
இந்திய நிறுவனங்கள் பிரிட்டிஷ் பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் அளவில் பங்காற்றுகின்றன.
உதாரணமாக , டாட்டா குழுமம் பிரிட்டனில் மிகப்பெரிய தொழில் நிறுவனம். அது மட்டும் பிரிட்டனில் 65,000 பேருக்கு வேலை தருகிறது.
பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவது மிக அதிக அளவில் இருக்கிறது.
சுமார் 3.9 பிலியன் டாலர்கள் அளவுக்கு பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பப்படுவதாக உலக வங்கி தகவல்களை வைத்து பிரிட்டிஷ் பத்திரிகையான 'கார்டியன்' 2013ல் வெளியிட்ட ஒரு அறிக்கை கூறுகிறது.
பிரிட்டனில் இந்திய மாணவர்கள் சுமார் 21,000 பேருக்கும் மேல் படிக்கிறார்கள். ஷெவெனிங் மற்றும் பிற படிப்பதற்கான உதவி பெறும் இந்திய மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
விஞ்ஞானம் மற்றும் கல்வித் துறைகளில் புதிய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி ஒத்துழைப்பிற்கான நிதி ஒதுக்கீடு 1 மிலியன் பவுண்டுகளிலிருந்து 150 மிலியன் பவுண்டுவரை தரப்படும் நிலையில், இந்த உறவு பலப்படுகிறது. வர்த்தகமும் அதிகரிக்கிறது.
இந்தியாவின் சர்வதேச கூட்டாளிகளில் பிரிட்டன் எங்கே இருக்கிறது?
பொருளாதாரத்தை தாராளமயமாக்கவும், உலகமயமாக்கவும் இந்தியா 1990களின் ஆரம்பத்தில் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வகையில் மாறுதல்களைச் செய்தது.
இதன் காரணமாக தொடங்கிய வளர்ச்சி கட்டம் இன்றும் தொடர்கிறது. பிரிட்டன் இந்த வளர்ச்சியில் பங்குகொள்ள சர்வதேச போட்டியை அதிக அளவில் சந்திக்கிறது.
பிரிட்டன் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. இன்று அது 12வது இடத்தில் இருக்கிறது.
ஏற்கனவே மோடி அவரது 18 மாத ஆட்சிக்காலத்தில் 27 நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்.
"கிழக்கே பார்க்கும்" கொள்கையில், இந்தியா தனது கவனத்தை ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகளை நோக்கித் திருப்பியிருக்கிறது. சீனாதான் இப்போது இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி. மோடியின் சீன விஜயத்தின் மூலம் 22 பிலியன் டாலர்கள் பெறுமதியான ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
கடந்த மாதம்தான், இந்தியா , 50 ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு ஒன்றை நடத்தியது. ஆப்ரிக்கக் கண்டத்தோடு உறவுகளையும், வர்த்தகத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடந்தது.
இதனிடையே, இளம் இந்தியர்கள் அதிக அளவில் அமெரிக்கா நோக்கியும், ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளை நோக்கியும், தங்களது கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைப் பரிசீலிக்கிறார்கள்.
பிரிட்டனில் வாழும் புலம்பெயர் இந்தியர்களின் பங்களிப்பு என்ன ?
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே 200 ஆண்டுகளுக்கும் மேலாக பகிர்ந்துகொள்ளப்பட்ட வரலாறு உள்ளது.
இருநாடுகளும் வலுவான ஜனநாயகம் மற்றும் கலாச்சாரத் தொடர்புகள், ஆங்கில மொழி ஆகியவை மூலம் தொடர்புபட்டுள்ளன.
பிரிட்டனின் வசிக்கும் இனச்சிறுப்பான்மையினரில் புலம்பெயர் இந்தியர்களே எண்ணிக்கை ரீதியில் அதிகாமானவர்கள். பிரிட்டனில் 15 லட்சம் புலம்பெயர் இந்தியர்கள் வசிக்கின்றனர்.
இந்த இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
உலகளவிலும் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், பிரிட்டனின் வசிப்பவர்கள் ஏழாவது இடத்தில் உள்ளனர்.
பிரிட்டனில் வாழும் இந்தியர்கள் பல்துறையில் செயலாற்றி வருகின்றனர். வர்த்தம், விளையாட்டு, அறிவியல், அரசியல் என பல்துறைகளில் அவர்களது பங்களிப்பு இருக்கின்றது.
எனவே இவர்கள் இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு இடையே ஒரு பாலமாக இருப்பது மட்டுமல்லாமல், இந்தியக் கலாச்சாரத்தின் மூலம் பிரிட்டனை வளப்படுத்துகின்றனர்.
இந்த உறவை இருதரப்புக்கும் பலனளிக்கும் வகையில் மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு புலம்பெயர் இந்தியர்களுடன் பிரிட்டன் மேலும் இணைந்து செயல்பட வேண்டும்.
அண்மையில் பிரிட்டிஷ் கவுன்சில் ஒன்றால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், இளம் இந்தியர்களுக்கு பிரிட்டனைப் பற்றிய நல்லதொரு புரிதல் இருப்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமன்றி குறிப்பாக பிரிட்டனின் கலாச்சாரத்தால் அவர்கள் பெரிதும் கவரப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் இளம் இந்தியர்களிடம் பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட 15 நாடுகளை பட்டியலிடும்படி கேட்டபோது, அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிரிட்டன் இருப்பது அறியப்பட்டது.
சரியான வாய்ப்புகள் இருக்குமாயின் பிரிட்டனில் இருப்பவர்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இந்தியாவில் குறுகியகால படிப்பு அல்லது வேலைவாய்ப்புக்கு போக விரும்புவர்களுக்கான ஒரு திட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் முன்னெடுத்தபோது 4000 விண்ணப்பங்கள் வந்தன.
எனவே, இந்தியாவைப் பற்றிய ஒரு நீண்ட கால , அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறை பிரிட்டனுக்கு வேண்டும். இந்த அணுகுமுறையில், அது கல்வி மற்றும் கலாசார உறவுகளை பயன்படுத்தி இந்திய, பிரிட்டன் உறவுகளை எதிர்காலத்தில் பாதுகாப்பானதாக்கவேண்டும்.