Saturday 26 September 2015

உணவை வீணாக்காதீர்கள்

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது, உற்று கவனித்தேன்..!
இலைக்கு வெளியே இரண்டு சோற்றுப் பருக்கைகள் இறைந்து கிடந்தன, அவைதாம்
அழுதுகொண்டிருந் தன."எதுக்கு இப்படி அழறீங்க" என்று கேட்டேன்?. அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.
"ஒரு ஏழை விவசாயி... கடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது,
நாற்று நட்டு, களை பறித்து,பயிர் செய்து, நீர் பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார்.. நாங்களும் நல்லா வளர்ந்தோம், என்னோட சகோதர மணிகளில் சிலதை எலிகள் நாசம் செய்தன.. பறவைகள் கொத்தித் தின்றன.. தப்பிப் பிழைத்த நாங்கள் அறுவடைக்குத் தயாரானோம்.
அறுத்து, களத்துக்கு கொண்டு வந்து, தூற்றி அதிலும் வீணாகிப்போன சகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய பைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள்.
அப்புறம் நெல் மணிகளிலிருந்து உமி நீக்கி எங்களை அரிசியாக்கும் போது காணாமல் போன சகோதரமணிகள் நிறைய பேர். விற்பனைக்கு கடையில் வைத்திருக்கும் போது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில் சிலரும், எடை போட்ட போது கொஞ்சம் பேரும் வீட்டுக்கு நீங்கள் வாங்கி வந்த போது, அரிசி களைந்து சமைக்கும் போது என்று எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்கள் தட்டிற்கு வந்து சேர்ந்தேன். இத்தனை பேர் உழைப்பில் விளைந்த என்னை.. பல இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை.. இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன செய்ய?" என்றது.
உணவை வீணாக்காதீர்கள், தேவையில்லாத உணவுகளை வீனடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் அது கூட இல்லாமல் சிலர் இருக்கின்றனர்.

COURTESY: R.VASANTHAKUMAR, BT ASSISTANT [E], GHS, EDACHITHUR