Tuesday 15 September 2015

தமிழ் வளர்த்த சான்றோர்கள்

தமிழ் வளர்த்த சான்றோர்கள்


19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகளாக பிறமொழி  ஆதிக்கத்தில் தொய்வுற்றிருந்த தமிழ்மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழறிஞர்கள் பலர். ஆய்வும் தொகுப்புமே இவர்களது  மூச்சு. இந்த தமிழ் வளர்த்த சான்றோர்களில் சிலரைப் பற்றி ஒரு சில வரிகள் இங்கே….

உ.வே.சாமிநாத அய்யர்

சென்னை மாநிலக் கல்லூரி எதிரே இன்னும் சிலையாக, ஓங்கி நின்று கொண்டிருக்கிறார் உ.வே.சாமிநாத அய்யர். அவர் மட்டும் இல்லை என்றால் எத்தனையோ இலக்கியங்கள் தமிழுக்கு கிட்டாமலேயே போயிருக்கும். “ஏடு காத்த ஏந்தல்” என்று அவரைச் சிறப்பிக்கிறார்கள். பல்வேறு ஆசிரியர்களிடமும் திசிபுரம் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் பயின்ற உ.வே.சாமிநாத அய்யரின் முக்கியப் பணி சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பாபாடல், பெருங்கதை முதலிய பழைய இலக்கியங்களை சுவடிகளில் இருந்து தொகுத்து, உரைகளைச் சரிபார்த்து தொகுத்து தமிழ் உலகத்திற்குத் தருவதற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தார். குறுந்தொகைக்கு உரை அகப்படாததால் அவரே உரையும் எழுதினார். நன்னூல் மயிலைநாதர் உரை, சங்கர நமச்சிவாயர் உரை என இலக்கண நூல்களையும் பதிப்பு செய்தார். அவர் சேகரித்து வைத்திருந்த நூல்கள் மட்டும் சுமார் 24 மாட்டு வண்டிகள் அளவுக்கு தேறிற்று.


பரிதிமாற் கலைஞர்



சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரை பரிதிமாற் கலைஞராக மாற்றிக் கொண்ட தமிழறிஞர் வாழ்ந்ததென்னவோ 32 ஆண்டுகள்தான். அதற்குள் தமிழுக்கு அவர் செய்த தொண்டுகள் அளப்பரியவை. தமிழ்மொழியை “உயர்தனிச் செம்மொழி” என்று முதன்முதலாக நிலை நாட்டியவர் இவர்தான். 1870ல் பிறந்த இவர் எம்.ஏ. தேர்வில் மாநில அளவில் முதலாவதாக தேறியவர். தனித்தமிழ் இயக்கத்துக்கு முன்பே தம் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டவர். இவரது “தமிழ் மொழி வரலாறு” மிக முக்கியமான ஆய்வு நூலாகும்.


தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்




தமிழ் ஆய்வு உலகில் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஒரு புதிய நெறியை உருவாக்கியவர். ராபர்ட் கால்டுவெல்லுக்கு அடுத்தபடியாக திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வை வளம்பெற வளர்த்தவர் தொ.பொ.மீ. மொழியியல் துறையில் விரிவான மொழியியல் ஆய்வை ஏற்று வளர்த்தவர். இந்திய அறிஞர்கள் பங்கு பெற்ற அரங்குகளிலும், வெளிநாட்டு அறிஞர்கள் அரங்குகளிலும் தமிழ் பண்பாட்டுத் தூதுவராக பணியாற்றியவர். சமூகவியல், சைவ சித்தாந்தம், உளவியல், மொழியியல், வரலாறு, கல்வெட்டு, மூல பாட ஆய்வு என இவரது அக்கறைகளும் பங்களிப்பும் விரிந்தது. இலக்கியத் துறையில் இருப்பாக இருந்த இடங்களைத் தன்னுடைய பேரறிவால் திறனாய்வுப் பார்வையில் விளங்கச் செய்தவர் தொ.பொ.மீ. சிலப்பதிகாரத்திற்கு இவரைப் போன்று வேறு எவரும் திறனாய்வு எழுதியதில்லை.


மறைமலை அடிகள்




தேகம். இது மகள் நீலாம்பிகை இசைத்த வள்ளலார் பாடலில் இருந்த ஒரு சொல். மறைமலை அடிகளுக்கு இதற்குப் பதிலாக “யாக்கை” என்ற தமழ்ச் சொல் இருந்திருக்கலாமே என்று தோன்றியது. இது நடந்தது 1916ல். இந்த சம்பவத்தின் விளைவாகத் தோன்றியதே ‘தனித் தமிழ் இயக்கம்’. தமிழில் பிற மொழிக் கலப்பை பெரிய அளவில் நீக்கி தூய தமிழ் ஒளிரச் செய்த மாபெரும் இயக்கம்.
வேதாசலம் என்பதே மறைமலை அடிகளின் இயற்பெயர். 1876 ஜூலை 15இல் திருக்கழுக்குன்றத்தில் ஒரு மருத்துவரின் மகனாகப் பிறந்தார். தமிழ்ப் புலவர் நாராயணசாமி பிள்ளையிடம் தமிழும், சோம சுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தமும் பயின்றார். கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய மறைமலை அடிகள் சமஸ்கிருதமும், ஆங்கிலமும் நன்கு கற்றவராக இருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுக்குப் பங்காற்றினார்.

தேவநேயப் பாவாணர்




தமிழே, உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த வாதங்களை முன் வைத்த தமிழறிஞர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் ஒரு சிறந்த சொல் ஆராய்ச்சி வல்லுநரும் கூட. உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியராக ஆரம்ப கால வாழ்க்கையைத் தொடங்கிய பாவாணர், தமிழக அரசின் தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குநராக உயர்ந்தவர். மன்னார்குடி பின்லே பள்ளியில் பணி ஆற்றிய போது படித்த இசைக் கல்வி அனுபவத்தின் பயனாக “இசைத் தமிழ் கலம்பகம்” என்ற இசைத் தமிழ் நூலை எழுதினார். தமிழர் வரலாறு, தமிழர் திருமணம், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் என அவர் தமிழினம் குறித்து எழுதிய நூல்கள் தமிழுக்கு அவர் அளித்த கொடை தனித் தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் தீவிரமாக  வலியுறுத்திய பாவாணர், நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழிச் சொற்கள் தமிழை வேராகக் கொண்டவை என்பதை வடமொழி வரலாறு என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.



கா. அப்பாத்துரையார்





அந்த தந்தைக்கு மகன் நாற்பது மொழிகள் கற்க வேண்டுமென ஆசை. ஆனால் மகன் கற்றது 18 மொழிகள்தாம்.  தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. இதில் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் பெரும்புலமை பெற்றார். அவர்தாம் பல்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார். குமரிக்கண்டம் பற்றி முதலில் ஆய்வு செய்தவர் இவரே. அப்பாத்துரையார் இந்தி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கினாலும், இந்தி எதிர்ப்பை எதிர்கொண்டு துணைவியாருடன் சிறை புகுந்தவர். “இந்தியாவின் மொழிச் சிக்கல்” என்ற ஆங்கில நூல் எழுதியமைக்காக மத்திய அரசுப் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அறிஞர் அண்ணா அமெரிக்காவின் யேல் பல்கலைக்குச் சென்றபோது அவருக்கு 16 பக்கங்களில் குறிப்புகளை வழங்கியவர் அப்பாத்துரையே.


சிதம்பர நாத செட்டியார்


கும்பகோணத்தில் 1907ல் பிறந்தவரான பேராசிரியர் அ.சிதம்பர நாத செட்டியார், மாபெரும் தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆங்கிலம் – தமிழ் – அகராதியை உருவாக்கி தமிழுக்கு பெரும் சேவை செய்யும் பணியை இவரிடம்தான் அப்போதைய சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.எல்.முதலியார் ஒப்படைத்தார். உலக அரங்கில் தமிழ் இலக்கியங்களின் உயர்வை உணர்த்தும் “An introduction to tamil poetry”  என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிட்டவர். உலகின் பல்வேறு இடங்களில் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துக்காட்டும் விதத்தில் உரையாற்றி பெருமை சேர்த்தவர்.

ஆபிரகாம் பண்டிதர்





ஆகத்து, 2, 1859-இல் பிறந்தவர். தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர், தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராக பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழு நேர மருத்துவராகப் பணியாற்றினார். இவர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தனது அண்ணன் சீனி.கோவிந்தராஜனிடம் முறையாக தமிழ்ப் பயிற்சி பெற்றார். சுயமரியாதை இயக்கச் சார்பாளராக தனது வாழ்வைத் தொடங்கியவர். திராவிடன், குடியரசு, ஊழியன் போன்ற இதழ்களில் பணிபுரிந்தார். புத்தர் ஜாதகக் கதைகளை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் இவர்தான். 1950களின் இறுதியில் கி.பி.3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். இதற்கு கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளை தரவுகளாகப் பயன்படுத்தினார். தமிழக வரலாற்றை தெளிவாக வரைமுறைப்படுத்தி ஒழுங்கு செய்ததில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. 19ம் நூற்றாண்டின் தமிழ் சமூக வரலாற்றை அறிவதற்கான நூலாக 19ம் நூற்றாண்டில் “தமிழ் இலக்கியம்” என்ற நூலை எழுதினார்.

மு. வரதராசன்





மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன், இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், சிறுகதைகள் மற்றும் நாவல்களுக்கும் புகழ் பெற்றவர். 1912ம் ஆண்டு ஏப்ரல் 25ல் பிறந்தார். தமிழில் வித்வான் படிப்பில் மாநிலத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர். 1939ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கீழ்திசை மொழிகளில் விரிவுரையாளர் ஆனார். இவர் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” நூல் இன்னமும் தமிழ் மாணவர்களுக்கு பயனாக உள்ளது. நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரைகள் என 85 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். பெர்னாட்ஷா, திரு.வி.க., காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார். இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த அவரது ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக் களஞ்சியமாக நோக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் முடிவில் மங்கி இருந்த தமிழ் மரபிசையை, தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

ச. வையாபுரிப் பிள்ளை





1891ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் பிறந்த ச.வையாபுரிப் பிள்ளை, 20ஆம் நூற்றாண்டின் முதன்மையான தமிழ் ஆராய்ச்சியாளர்களுல் ஒருவர். சிறந்த பதிப்பு ஆசிரியராக விளங்கியவர். தொல்பொருள் மற்றும் ஒப்பிலிக்கிய சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலக்கணக்கை ஆராய முயன்றவர். தமிழில் மிக அதிக ஆர்வம் இருந்தும் சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராக 7 ஆண்டுகள் பணி செய்தார். உ.வே. இறந்ததற்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து ஆய்வு செய்து வெளியிட்டவர். 1926ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கித் தந்த தமிழ் பேரகராதியில் தலைமைப் பதிப்பாசிரியர் இவர்தான். 1936 முதல் 1946 வரை சென்னை பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித் துறை தலைவராக விளங்கினார். மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.உ.சி. ஆகியோருக்கு நண்பர். வ.உ.சி.யின்  நூல் பதிப்புகளில் இவரும் பங்கு பெற்றவர்.


மயிலை சீனி. வேங்கடசாமி



சங்க கால இலக்கியம், வரலாறு, நுண்கலை, தொல்லியல் மற்றும் சமூகவியல் என ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமியின் பங்களிப்பு அளப்பரியது. இவரது தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரது குடும்பத்தில் ஓலைச் சுவடிகள் மற்றும் நூல்களை சேகரித்து வந்தனர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றினார். 1974 அக்டோபர் மாதம் 10ஆம் நாள் காலமானார்.

ரா.பி.சேதுப்பிள்ளை






பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை எதுகை மோனையைப் பயன்படுத்தி மேடைப் பேச்சில் தமிழகத்தையே கட்டிப் போட்டவர். சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட இவர் பிறந்த ஊர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ராசவல்லிபுரம். திருநெல்வேலியில் வழக்கறிஞராகவும், நகர மன்றத் தலைவராகவும் பதவி வகித்த இவர் தமிழின் மேல் ஏற்பட்ட நாட்டத்தால் பச்சையப்பன் கல்லூரியில் சில ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது ஆராய்ச்சி நூல்களில் “ஊரும் பேரும்” புத்தகம் மிகப் புகழ் பெற்றது. இலக்கிய நூல்களில் இன்கவித் திரட்டு, செஞ்சொற் கவிக்கோவை ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. “தமிழ் இன்பம்” என்ற இவரது நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. பழைய தமிழ் இலக்கியங்களுக்கும் மறுமலர்ச்சி நூல்களுக்கும் ஒருவகை தொடர்புப் பாலமாக ரா.பி. சேதுப்பிள்ளை இருந்ததாக பி.ஸ்ரீ. ஆச்சாரியா குறிப்பிடுகிறார்.