பொருள் வெறி, அதிகார வெறி மனித குலத்தை அழித்து விடும்: ஐநா.வில் போப் பேச்சு
ஐநா.வில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், பேராசை என்ற ஒன்று மட்டுமே பூமியின் இயற்கை ஆதாரங்களை சுரண்டி வருகிறது, இதனால் வறுமை அதிகரிக்கிறது என்று உலகத் தலைவர்களை எச்சரித்தார்.
நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய போப் பிரான்சிஸ் பேசியதன் முக்கிய அம்சங்கள்:
அதிகாரம் மற்றும் பொருள் சேர்க்கும் பேராசை இயற்கை ஆதாரங்களின் துஷ்பிரயோகத்திற்கும், நலிந்தோர்களையும், ஏழைகளையும் ஒதுக்கித் தள்ளுவதிலும் போய் முடிந்துள்ளது.
இத்தகைய புறமொதுக்குதல் மற்றும் சமத்துவமின்மையின் மிகப்பெரிய எதார்த்தம் அதன் அத்தனை விளைவுகளுடன், என்னை அனைத்து கிறித்துவர்கள் மற்றும் பிறருடனும் சேர்த்து இங்கே பேசத் தூண்டுகிறது.
"சுற்றுச்சூழலுக்கான உரிமை" தேவை. மனித குலம் இதனை துஷ்பிரயோகம் செய்ய, சுரண்ட அதிகாரம் படைத்தவர்களல்லர். சுற்றுச்சூழலுக்கு விளைவிக்கப்படும் தீங்கு மனித குலத்துக்கு இழைக்கப்படும் தீங்காகும். எனவே உலக தலைவர்கள் சுற்றுச் சூழலை பாதுகாப்பது அவசியம்.
சர்வதேச நிதி அமைப்புகள் அடக்குமுறை, சுரண்டல் சார்ந்த நிதிக்கடன் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. பெண்களை சில நாடுகள் கல்வியிலிருந்து புறமொதுக்குகிறது இதுதவறு.
ஆட்கடத்தல் என்ற விவகாரத்தை உலக நாடுகள் முற்றிலும் ஒழிக்க வேண்டும். உயிர்ப்பன்மையை அழிப்பதை நிறுத்த வேண்டும், இல்லையேல் அது மனித உயிரினத்துக்கே ஆபத்தாக முடியும்.
ஏழைகளுக்கு கல்வியுரிமை, தங்குமிடம், உழைப்பு மற்றும் நிலவுரிமைகள் இருக்கிறது. இவை பாதுகாக்கப்பட வேண்டும்.
ஐ.எஸ். அமைப்பை குறிப்பிட்டு மதம் சார்ந்த சிறுபான்மையினரை அடக்குமுறை செய்வது கண்டிக்கத் தக்கது. அதேபோல் கலாச்சார பாரம்பரியங்களை அழிப்பது தவறு.
இந்த அம்சங்களை உள்ளடக்கி அவர் பேச்சு அமைந்தது.