Friday, 25 September 2015

அறிவோம் நம் மொழியை: ஒரு பொறி பெருந்தீ

நீர், ஒரு துளியிலிருந்து ஆரம்பித்து, தாரை, ஓடை, காட்டாறு, ஆறு, ஏரி, கடல் என்று வெவ்வேறு வடிவங்கள் எடுப்பதுபோல தீயும் வெவ்வேறு வடிவங்கள் எடுக்கின்றன. சொல்லப்போனால், பெருவெடிப்பு (பிக் பேங்) என்று அழைக்கப்படும் பிரபஞ்சத் தோற்றத்துக்குக் காரணமான நிகழ்வே தீயை அடிப்படையாகக் கொண்டதுதான். பிரபஞ்ச முடிவின்போது ஏற்படும் தீ எல்லாவற்றையும் அழித்துவிடும் என்பது புராணங்கள் அடிப்படையிலான நம்பிக்கை. அதற்கு ஊழித்தீ என்று பெயர்.
தீயின் மிகச் சிறு அவதாரம் பொறி. கரடுமுரடான இரண்டு பொருட்களுக்கிடையில் உராய்வு ஏற்படும்போது பொறி உண்டாகி, அந்தப் பொறி காட்டுத்தீ அளவுக்குப் பெருகுவதை ஆதி மனிதர்கள் கண்டார்கள். சிக்கிமுக்கிக் கல்லைக் கொண்டு பொறி உண்டாக்கி, தீ வளர்க்கும் வித்தையை அவர்கள் கண்டறிந்தார்கள். இதன் அடுத்தகட்ட வளர்ச்சி, ‘தீக்கடைதல்’, மத்தைக் கொண்டு தயிரைக் கடைவதுபோல் சிறு கோலைக் கொண்டு சிறு குழிக்குள் கடைந்து தீயை உண்டாக்குவதற்குப் பெயர்தான் தீக்கடைதல். இதற்குப் பயன்படும் கோலுக்கு ‘தீக்கடைக்கோல்’என்று பெயர். இதற்கு ‘அரணிக்கட்டை’ என்றொரு பெயரும் இருக்கிறது. தீக்கடைவதற்குப் பழந்தமிழில் ‘ஞெலிதல்’ என்றொரு சொல்லும் இருக்கிறது. இந்தச் சொல்லிலிருந்து உருவான ‘ஞெலிகோல்’, தீக்கடைக்கோலைக் குறிக்கும். ஞெகிழி, தீத்தருகோல் போன்ற சொற்களும் தீக்கடைக்கோலைக் குறிப்பவை. பெரும்பாலும், அரச மரம், வன்னி மரம் போன்றவற்றின் சிறு கட்டைகளே தீக்கடைவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இப்படியாக, ஒரு பொறியிலிருந்து தீ உருவாவதைப் போலச் சட்டென்று ஒரு புதிய எண்ணம், உத்தி போன்றவை தோன்று வதைக் குறிக்கும் மரபுத் தொடர்தான் ‘பொறி தட்டுதல்’ (அவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்துக்கொண்டிருந்தபோது எனக்குப் பொறிதட்டியது; ஆம், நான் படித்த பள்ளியின் வேதியியல் ஆசிரியர் அவர்.) சூடாக விவாதித்துக்கொண்டிருப்பதைப் ‘பொறி பறக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள்’ என்றும் சொல்வதுண்டு.
பொறிக்கு அடுத்தது ‘அக்னிக் குஞ்சு’. இந்தச் சொல்லை பாரதியாருக்கு முன்னும் பின்னும் பொதுவழக்காக யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. தற்காலத்தில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது பாரதியாரோடு (மறைமுகமாகவேனும்) தொடர்புபடுத்தியே பயன்படுத்துகிறோம்.
சுடர், சுவாலை, தீநாக்கு, பிழம்பு, தழல், கங்கு, கொள்ளி, காட்டுத்தீ என்று தான் பற்றிய பொருட்கள், தீவிரம் போன்றவற்றைச் சார்ந்து தீ பல வடிவங்களும் பெயர்களும் பெறுகிறது.
வட்டாரச் சொல் அறிவோம்
கடற்கரையைக் குறிக்கும் ‘அலைவாய்க்கரை’ என்ற சொல் தென் தமிழகத்தின் கடலோர மக்களிடையே வழக்கில் உள்ளது. இந்தச் சொல் இலங்கைத் தமிழிலும் இருப்பதாக அறிகிறோம். பேச்சு வழக்கில் ‘அலவாக்கரை’ என்பார்கள். முருகனின் அறுபடை வீடுகளில் கடலோரத்தில் இருக்கும் திருச்செந்தூருக்கு ‘திருச்சீரலைவாய்’ என்றொரு பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது.