Wednesday, 30 September 2015

உலக இருதய தினம்

 உலக இருதய தினம்; 29.09.2015
அக்கறை இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்

உலகிலேயே இருதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இருதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச இருதய கூட்டமைப்பு சார்பில் செப்., 29ல் உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


'நைட் ஷிப்ட்', முறையற்ற உணவு பழக்கம், அதிக நேர பணி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. அதே போல் உலகில் மாரடைப்பால் மரணம் அடைபவர்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. 80 சதவீத மாரடைப்புகள், தடுக்கப்படக்கூடியவை.


புகை பிடிப்பவர்கள், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியவற்றால் இருதய நோய் ஏற்படலாம். சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடைந்து மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

எப்படி தவிர்ப்பது:
* புகை பிடிப்பதற்கு 'நோ' சொல்லுங்கள்.
*உப்பு அதிகம் பயன்படுத்துவதால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இருதய நோய் வாய்ப்பு அதிகரிக்கிறது.
* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.
l*யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இருதய நோயில் இருந்து பாதுகாக்கும்.
*'எஸ்கலேட்டர்', 'லிப்ட்' ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
*காய்கறிகள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை விட வேண்டும். கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம், சூரியகாந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.
*சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது, இருதய நோயில் இருந்து விடுபட சிறந்த மருந்து.

இருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி:- டாக்டர் ஜி.துரைராஜ், மதுரை 98421 05000:
இருதயம் ஒரு தானியங்கி தசையாகும். ஒருவரது மடித்த உள்ளங்கை அளவே உள்ள இருதயம் தானாக சுருங்கி விரியும் தன்மை கொண்டது. ஒவ்வொரு முறை சுருங்கி விரியும் போதும் 55 சதவீதத்திற்கு மேல் ரத்தத்தை உடல் உறுப்புக்களுக்கு அனுப்பி வைக்கும்.இருதயம் சுருங்கி விரிய தேவையான சத்து, இருதயத்திற்கு மேல் கிரீடம் சூட்டியது போல் அமைந்துள்ளது. கொரானரி தமனிகளில் வரும் ரத்தத்தின் மூலம் கிடைக்கிறது. இந்த கொரானரி தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இருதயத்திற்கு தேவையான சத்து கிடைக்காத போது இருதயத் தசை பலவீனம் அடைகிறது. இதனால் இருதய வீக்கம் ஏற்பட்டு நடக்கும் போதும், படுக்கும் போதும் மூச்சிரைப்பும், பலவீனமும் ஏற்படுகிறது. இருதயத் தசை பலவீனம் முற்றிய நிலையில் கால்களில் வீக்கம் ஏற்படும். கொரானரி தமனிகளில் ஏற்படும் அடைப்பை ஸ்டென்ட் சிகிச்சை, பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தால் இருதயத் தசை பலவீனம் அடைவதைத் தடுக்க முடியும். கொரானரி தமனிகளில் அடைப்பு இல்லாதவர்களுக்கும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, உடல் பருமன், பரம்பரை மற்றும் நுண் கிருமிகளால் இருதயத் தசை பலவீனம் அடையலாம். இந்த வியாதி பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். இருதயத் தசை பலவீனம் அடைந்தவர்களில், 5 ஆண்டுகளில் 50 சதவீதம் வரை மரணம் அடைய வாய்ப்பு உண்டு.இதில் பெரும்பாலோர் திடீர் மரணம் அடைவார்கள். இருதயத் துடிப்பைச் சரி செய்யும் கருவியை மார்பில் நிரந்தரமாகப் பொருத்துவதன் மூலம் திடீர் மரணத்தைத் தடுக்கலாம். அத்துடன் மருந்துகளையும் தவறாமல் எடுக்க வேண்டும்.

செயற்கை உணவை தவிர்ப்போம்- - டாக்டர்கள் ரமேஷ், ேஹமநாத், மதுரை
82200 44606, 82200 44610:
இந்தாண்டு 'ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி இருதய நோயை தவிர்ப்போம்' என்ற தலைப்பில் உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்போம் என உறுதி எடுப்போம். செயற்கை உணவை தவிர்த்து இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்போம். குழந்தைகளுக்கும் இதே உணவு முறைகளை ஊக்குவிப்போம். கற்பிப்போம்.புகையிலையை (பீடி, சிகரெட், குட்கா) முற்றிலும் தவிர்ப்போம். இதன் மூலம் குழந்தைகளையும் நண்பர்களையும் புகையிலை பாதிப்பில் இருந்து விடுவிப்போம். தினந்தோறும் உடற்பயிற்சி, விளையாட்டில் குறைந்தது அரைமணி நேரமாவது செலவழிப்போம். இருதய நோய் காரணிகளான சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, உடல் பருமன் ஆகியவற்றை கண்டறிந்து முறையாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவோம்.

திடீர் மாரடைப்பு ஏன்
சாதாரண மாரடைப்பு என்பது இருதயத்திற்கு செல்லக்கூடிய ௩ ரத்தக் குழாய்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது மூன்றிலும் அடைப்பு ஏற்பட்டு, இருதயத்திற்கு செல்லும் ரத்தத்தில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜன் குறைந்து, சதைகள் கெட்டுப்போவதால் ஏற்படுகிறது. ஆனால், திடீர் மாரடைப்பு என்பது இருதயத்திற்கு செல்லக்கூடிய எலக்ட்ரிக்கல் சிஸ்டம் கெட்டுப்போவதால் மிக வேகமாக அளவிட முடியாத துடிப்பு ஏற்பட்டு, மூளைக்கு செல்லக்கூடிய ரத்த அளவு குறைந்து சுய நினைவை இழந்து மயக்கமடைதலாகும். சாதாரண மாரடைப்பை நாம் சுலபமாகக் கண்டுபிடித்து காப்பாற்றிவிடலாம். ஆனால், திடீர் மாரடைப்பை உடனடியாக கவனிக்காமல் விட்டால் உயிரிழப்பு ஏற்படும்.

இதற்கு முக்கிய காரணங்கள்- டாக்டர். பாஸ்கரன், மதுரை:அதிகமான கொழுப்புச் சத்து நிறைந்த உணவு உட்கொள்ளுதல், சிகரெட் மற்றும் மதுப்பழக்கம், அளவுக்கதிகமான டென்ஷன், வேலைப்பளு, சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, உடற்பயிற்சியின்மை, ஈரலில் அதிக கொழுப்புச்சத்து சேர்த்தல், ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எந்தவிதமான உணவு மற்றும் மருந்துக்கட்டுப்பாடு இல்லாதிருத்தல்.மேலே குறிப்பிட்ட 9 காலங்களை உணர்ந்து செயல்பட வேண்டும்.35 வயதிற்குமேல் கட்டாயமாக ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து உடலிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டால் திடீர் மாரடைப்பு ஏற்படாது தடுக்க இயலும்.

மாரடைப்பு அறிகுறிகள்-- டாக்டர். பி.எஸ்.நாகேந்திரன், மதுரை. 97901 11411: புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், உடலின் எடை, உடற் பயிற்சி செய்யாமை, சர்க்கரை வியாதி போன்றவற்றால் மாரடைப்பு வரும். இது கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள்.வயது, பரம்பரையாக வரும் மரபணுத் தன்மை, இது தவிர ரத்தக் குழாயில் எவ்வித அடைப்பின்றியும் மாரடைப்பு வரலாம். இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இருதயத்தின் ரத்தக் குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இது கட்டுப்படுத்த முடியாத காரணங்களாகும். நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம், வியர்த்தல், குமட்டல், மயக்கம் வருவது போல உணர்தல், மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக் கூட்டின் பின்புறமாக வலி இருக்கலாம். இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடது கைக்கு பரவலாம். வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி, தீவிர நிலையில் ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது.மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.

ருமாட்டிக் இருதய நோய்கள்:- டாக்டர், கே.ஜி.புவனேஷ்பாபு,மதுரை.
94866 42430:
ருமாட்டிக் நோயினால் மைட்ரல் மற்றும் அயோட்டிக் வால்வுகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இதில் மைட்ரல் வால்வு சுருக்கம் ௧௫ முதல் ௩௦ வயது ஆண் மற்றும் பெண்களை தாக்குகிறது. பெண்களுக்கு அவர்கள் கர்ப்ப காலத்தில் இந்த நோயினால் பிரசவத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ருமாட்டிக் இருதய நோய் வரக்காரணமானது ருமாட்டிக் காய்ச்சல். இது 'ஜிபிஎஸ்' என்ற நுண்கிருமியினால் (பாக்டீரியா) ஏற்படுகிறது. ௫ முதல் ௧௫ வயது குழந்தைகளை இது தாக்குகிறது. ஆரம்பத்தில் இது தொண்டை அலர்ஜி போல் காணப்படுகிறது. அதற்கான சரியான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ருமாட்டிக் காய்ச்சலாக காணப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் பெரிய முட்டிகள் ஆகியவை பாதிக்கப்பட்டு வீக்கம், வலி மற்றும் நடக்க முடியாத நிலைமைக்கு கொண்டு செல்கிறது. ௨ முதல் ௪ வாரங்களில் இந்த பிரச்னைகள் தானாக மாறி விடுகின்றன. ஆனால், ௫௦ சதவீத குழந்தைகளுக்கு இருதயம் பாதிக்கப்படுகிறது.இருதய நோய் முற்றிய பிறகே ருமாட்டிக் காய்ச்சல் வந்ததாக சில சமயம் கணிக்க வேண்டியுள்ளது. இந்த காய்ச்சல் வந்த குழந்தைகளுக்கு 'எக்கோ கார்டியோ கிராம்' இருதய ஸ்கேன் எடுத்து, வால்வுகளை சரியாக இருக்கின்றனவா என அறிய வேண்டும். இருதய ஸ்கேனில் இருதய வால்வு பாதிப்பு இருந்தால் மருத்துவர் ஆலோசனை பேரில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். பெனிசிலின், எரித்திரிரோமைசின் மாத்திரைகளை  தொடர்ந்து உட்கொள்ள வேண்டி வரும்.
Thanks to: Teachers Friendly Blog, Tamilnadu.