புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலைகள்
புயல் உருவாகும் போதெல்லாம் துறைமுகங்களில் ஒன்றாம் எண், இரண்டாம் எண், மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்படுவதாக அறிவிக்கிறார்களே, இவை ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றன? இதனால் என்ன பயன்?
முதலில் புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன? தாழ்வுநிலை என்றால் என்ன? சுழற்காற்று என்றால் என்ன?
தண்ணீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாய்வது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம். ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை.
காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை வீசினால் அதற்கு (காற்று) அழுத்தம் (Depression) என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் (Deep Depression). 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் (Cyclonic strom). அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).
Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தை.
புயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் ‘சிக்னல்’தான் இந்தக் கூண்டுகள்.
இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு.
இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன. நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க... எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.