Friday, 11 December 2015

மனதைப் பூரணமாக்கி முழுவதும் அடக்குவது கல்வி - விவேகானந்தர்


கல்வி என்பது என்ன, அது புத்தகப் படிப்பா, இல்லை. பலவகைப்பட்ட அறிவைத் தேடிக் கொள்வதா, அதுவும் இல்லை. சங்கல்பத்தின் போக்கையும், வெளிப்பாட்டையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பயனளிக்குமாறு செய்கின்ற பயிற்சியே கல்வி.
கல்வி என்பது ஏராளமான உண்மைகளை மனதில் நிறைப்பதல்ல. மனதைப் பூரணமாக்கி முழுவதுமாக அதை அடக்குவதே கல்வியின் நோக்கம்.
என்னைப் பொருத்தவரையில் கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரண்டு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும்.
வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பதல்ல கல்வி. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துகளை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது.
நீங்கள் ஐந்தே ஐந்து கருத்துகளை நன்கு கிரகித்து, அவை உங்கள் வாழ்க்கையாக, நடத்தையாகப் பரிணமித்து நிற்கச் செய்ய முடியுமானால், ஒரு புத்தகச் சாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனைவிட நீங்கள் அதிகமான கல்வி பெற்றவர். செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால், நூல் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள்; கலைக் களஞ்சியங்கள் அல்லவா ரிஷிகள்!
சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச் செய்கிற கல்வியே தேவை.
சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்துக்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி, அதைக் கல்வி என்று சொல்ல முடியுமா? ஒருவனைத் தன் சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்வதே உண்மையான கல்வி.
தொழிற்கல்வி வேண்டும். தொழில்வளம் பெருகுவதற்கான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். மக்கள் வேலை தேடி அலைவதை விட்டுவிட்டு கைத்தொழிலில் ஈடுபட்டு நாலு காசு சம்பாதிக்கத் தகுதி உடையவர்களாக வேண்டும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயற்சிக்காதீர்கள், முடிந்தால் அதைவிடச் சிறந்த ஒன்றை அவனுக்குக் கொடுங்கள். முடிந்தால் ஒருவன் எங்கு நிற்கிறானோ, அங்கிருந்து அவனை முன்னுக்குத் தள்ளுங்கள். அதைச் செய்யுங்கள். மாறாக, அவனிடம் இருப்பதையும் கெடுக்காதீர்கள்.
ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக்கொள்ள யாரால் முடியுமோ, அவர்தான் உண்மையான ஆசிரியர். யாரால் மாணவனின் நிலைக்கு உடனே இறங்கி வர முடியுமோ, தன் மனதை மாணவனின் மனதுக்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால் பார்க்கவும் அவனது காதுகளால் கேட்கவும் அவனது மனதின் மூலம் புரிந்து கொள்ளவும் முடியுமோ அவர்தான் உண்மையான ஆசிரியர். இத்தகைய ஆசிரியரால்தான் கற்றுத் தர முடியும், மற்ற யாராலும் முடியாது.
உங்கள் பல்கலைக்கழகங்களைப் பாருங்கள். ஐம்பது ஆண்டுகளாக இருந்து அவை என்ன செய்துவிட்டன? சுய ஆக்கம் (ர்ழ்ண்ஞ்ண்ய்ஹப்ண்ற்ஹ்) உடைய ஒருவனைக்கூட அவை படைக்கவில்லை. அவை வெறும் தேர்வு நடத்தும் குழு, அவ்வளவுதான்.
உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது.