இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான ஒப்பந்தம்:
இந்திய பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில் கையெழுத்து
இந்தியாவில் புல்லட் ரயில் உள்கட்டமைப்பு வசதியை நிர்மாணிப்பதற்கான ரூ.98 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இன்று (சனிக்கிழமை) டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
தொடர்ந்து இருநாட்டுப் பிரதமரும் இந்திய - ஜப்பானிய தொழிலதிபர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
பின்னர் இருநாடுகளுக்கும் இடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் புல்லட் ரயில் உள்கட்டமைப்பு வசதியை நிர்மாணிப்பதற்கான ரூ.98 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஏற்கெனவே, மும்பை - அகமதாபாத் மார்க்கத்தில் புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பலமுறை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இந்த மார்க்கத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் நிலையில் 560 கி.மீ தூரத்தை வெறும் 3 மணி நேரத்தில் பயணித்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அணுசக்தி ஒப்பந்தமும் கையெழுத்தானது. தவிர, பாதுகாப்பு உபகரணங்களையும் தொழில்நுட்பங்களையும் பரிமாறிக்கொள்வது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதைத் தொடர்ந்து, வரும் 2016 மார்ச் 1-ம் தேதி முதல் ஜப்பானியர்களுக்கு 'விசா ஆன் அரைவல்' (visa on arrival) அதாவது இந்தியா வந்தவுடன் விசா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், சீர்திருத்தங்களை அமல் படுத்துவதிலும் புல்லட் ரயில் வேகத்தில் செயல்படுவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே புகழாரம் சூட்டினார்