Monday, 14 December 2015

பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சை தொடங்கியதால் அமைதி ஏற்படும்: மாநிலங்களவையில் சுஷ்மா விளக்கம்

மாநிலங்களவையில் விளக்கமளித்த சுஷ்மா ஸ்வராஜ் | படம்: பிடிஐ.

பாகிஸ்தானுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது, இரு நாடுகளில் அமைதிக்கு வித்திடும் என மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த் 9-ம்தேதி நடைபெற்ற 'ஆசியாவின் இதயம்' மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார்.
மேலும் இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோரையும் அவர் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், கடந்த வாரம் தான் மேற்கொண்ட பாகிஸ்தான் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று (திங்கள்கிழமை) மாநிலங்களவையில் தாமகவே முன்வந்து விளக்கமளித்தார்.
அவர் அவையில் பேசும்போது, "பாரீஸ் பருவநிலை மாநாட்டின்போது பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசினர். இருநாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு இது முன்னோட்டமாக அமைந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தானை உள்ளடக்கிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது அதி முக்கியமாகும். அதேவேளையில் இந்த பேச்சுவார்த்தையை சுமுகமாக முன்னெடுத்துச் செல்ல பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஒழிக்க வேண்டும் என்பதை நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.
அந்த வகையில், மும்பை தாக்குதல் வழக்கை தீவிரப்படுத்த பாகிஸ்தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளோம்.
இத்தகைய சூழலில் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை துளிர்த்திருப்பது இப்பிராந்தியத்தில் அமைதியும், வளர்ச்சியும் நிலைநிறுத்தப்பட புதிய ஆரம்பமாக அமையும் என நம்புகிறோம்" என்றார்.