உணவும் உறக்கமும் படிப்புக்கு உதவும்
"இவன் ஒழுங்காகப் படிக்கிறதே இல்லை. என்னவென்று கேளுங்கள்' என்று தன் பிள்ளைகளைப் பற்றிக் குறைகூறும் பெற்றோரைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்களைப் பார்த்து நான் கேட்கிற கேள்வி: இவன் ஒழுங்காகச் சாப்பிடுகிறானா? முறையான தூக்கம் உண்டா?
இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று முறைப்பார்கள். உண்பதும் உறங்குவதும்போலவே, படிப்பதும் ஓர் இனிய அனுபவம்தான். மிகினும் குறையினும் நோய் செய்யக் கூடியவையாக உணவும் துயிலும் அமைந்துவிடுவதால், அவையே பெரும்பாலும் படிப்பிற்கு இடையூறாகிவிடுவதைப் பலர் உணர்வதில்லை.
பசியும் தூக்கமும் வருவதுபோலவே, படிக்கிற ஆர்வமும் பிள்ளைகளுக்கு இயல்பாக வர வேண்டும். பசியில்லாத சமயத்தில் ருசிக்காகவேனும் உண்பதுபோல, உறக்கம் வராதபோதும் ஒரு சுகத்துக்காகப் படுத்திருப்பதுபோல, படிப்பதும் இயல்பூக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆர்வமாக வளர வேண்டும்.
அதைவிடுத்து, கட்டாயமாகத் திணிக்கப்படும் எந்த ஒன்றின்மீதும் வெறுப்புத் தோன்றும். வெறுப்பு அருவருப்பாக மாறுகிறபோது, அதன்மீது பகைமை வளரும்; படிப்பு கெடும்.
இந்தப் படிப்பை, வெறும் புத்தகப் படிப்பாக- அதுவும் பாடத்திட்டத்திற்கு உட்பட்ட பாடநூல்களின் படிப்பாக மட்டும் ஆக்குவது பலவீனம். குறைந்தபட்சம், பத்திரிகைகள், இலக்கியங்கள் வாசிப்பிற்கு உள்ளாக்கப்படும்போது வருகிற வளர்ச்சி, படிப்பாக மாறி அது வாழ்க்கைக்கான படிப்பினைகளைக் கொடுப்பதாக உயரும்.
அத்தகைய வாசகர்களாக, கல்வி பயிலும் மாணவ, மாணவியர் உருவாக, பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும்.
மருந்து மாத்திரைகள் கொடுக்கிறபோதே, உணவுக்கு முன்- உணவுக்குப் பின் என்று மருத்துவ உலகம் உணவை முன்வைத்துச் சொல்வதுபோல, தேர்வுக்கு முன் தேர்வுக்குப் பின் என்று மாணவ, மாணவியர் பயில்வதற்கான பத்திரிகைகளை, புத்தகங்களைப் படிக்கக் கொடுப்பது நல்லது. அத்தகைய பழக்கமே கல்வியில் அவர்கள் சிறந்து விளங்குவதற்கு நாம் காட்டும் வழிகளுள் தலையாயது.
பாடப்புத்தகத்திற்கு வெளியில் போனால், பயில்பவர்களின் கவனம் திசை திரும்பித் தேர்வில் கோட்டைவிடுவார்களோ என்பது பலவீன எண்ணத்தின் பலனாகத் தோன்றும் பயம். அதுவே பலமாக விளங்கும் என்பதே அனுபவ உண்மை.
அத்தகைய நிலையில், மனம் ஒன்றை விரும்பும்போது, அது கட்டாயமாக மறுக்கப்பட்டு, அதனினும் மேலான ஒன்றாக, மிகவும் தேவையான ஒன்றாக இருந்தபோதிலும், அது வலுக்கட்டாயமாகக் கொடுக்கப்படும்போது, திணிப்பாகவே மாறிவிடும். அவ்வாறு திணிக்கப்படும் பாடங்கள் விருப்பமே இல்லாமல் வெறுப்பாகப் படிக்கப்படும்போது, மனமும் மூளையும் மறுதலிக்கும்.
எனவே, உண்ணும் உணவின்மீது ஒரு விருப்பம் வந்து உண்பதுபோல, பயிலும் பாடத்தில் ஒருவித ஈடுபாடு வந்தால்தான் சரியாக இருக்கும்.இங்கே ஒன்றை நினைவுபடுத்திப் பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
எதையும் தின்கிற பொருளாய்க் கருதுகிற பாலப் பருவத்தில் கிடைப்பதையெல்லாம் வாய்க்குள் கொண்டு திணிக்கிற ஆர்வம் எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு. அந்தப் பற்றும் பசியொத்த ஆர்வமும் படிப்பின்மீதும் பிள்ளைகளுக்கு இயல்பாகவே வரும்.
எதையும் பார்க்கிற படிக்கிற ஆர்வமும் அந்தப் பருவத்தில் மெல்லத் தலையெடுக்கும். ஆயிரமாயிரம் கேள்விகளோடு கனவுகளோடு அந்தக் குழந்தைகள் பெற்றோரையோ பெரியோர்களையோ அணுகுகிறபோது, நமக்கிருக்கும் அவசரம், பதற்றம் காரணமாக அலட்சியப்படுத்தினாலோ, அல்லது கண்டுகொள்ளாமல் விடுவதாலோ, அவை முளையிலேயே கருகும். அல்லது வேறு வழிகளில் விளக்கங்கள் தேடித் திரியும்.
எனவே அந்தப் பருவத்தில், பசிக்கு இடையில் ருசிக்கும் நலத்திற்கும் நொறுவல் தீனிகள் கொடுப்பதுபோல, சின்னச் சின்ன வாசிப்புக்குரிய புத்தகங்களைக் கொடுப்பது ஆரோக்கியமான அவசியமான தேவை.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பார் எனது அம்மாவின் அம்மா. விடுமுறைப் பொழுதுகளில் அவர் வீட்டுக்குப் போகும்போது, நிறைய நொறுக்குத் தீனிகள் கிடைக்கும். கூடவே புத்தகங்களும் இருக்கும்.
அவர் படிக்கும் ராமாயண, மகாபாரதக் கதைகளை, பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், கபீர்தாசர், வாரியார் சுவாமிகள் உள்ளிட்ட பெரியோரின் குறுங்கதைகளை, சிந்தனைத்துளிகளைத் திரும்பத் திரும்பப் படிப்பதில் ஏற்பட்ட சுகத்திற்கு இணையானது எதுவுமில்லை. அதுவும் படக்கதைகளாகத் தரும் அம்புலிமாமாவை, கோகுலத்தை, ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயத்தை மறக்க முடியுமா?
எனவே, எங்கே படிக்கிறோம் என்பது முக்கியமில்லை, என்ன படிக்கிறோம், அதை எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அது உண்ணும் உணவினும் உறங்கும் பொழுதினும் இனிதாகி உயிர்வளர்க்கும் ஆற்றல் உடையது.
அறுசுவை உணவுகளை இலையில் படைத்து வெறும் சோற்றை மட்டுமே உண்ண எடுத்துக் கொள்ளச் சொல்வது போலத்தான், பாடத்திட்டத்தை மட்டுமே படிக்கத் தூண்டும் படிப்பு. படிக்கத் தகுந்த எல்லாவற்றையும் கண்டு, அது காட்டிப் படிக்கத் தூண்டிக் கொடுக்கும் படிப்புத்தான் இன்றைக்கு இன்றியமையாத் தேவை.