குடிசைகள் இழந்தோருக்கு புதிய வீடுகளுடன் ரூ.10,000 உதவி; பயிர் இழப்பீட்டுத் தொகையையும் அறிவித்தது தமிழக அரசு
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மழையின் காரணமாக குடிசை வீடுகளை இழந்த அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கட்டித் தரப்படும்.
சென்னை மாநகரில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில் குடிசை வீடுகளில் தங்கி இருந்தவர்கள் தங்கள் வீடுகளை இழந்து விட்டனர். ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 10,000 குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இவர்களுக்கு உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு வெள்ள நிவாரணத் தொகை:
மழை வெள்ளத்தால் பாதித்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 5,000 ரூபாயும், ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை சிறப்பு வெள்ள நிவாரணத் தொகுப்பாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்காணும் தொகையானது, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வேட்டி, சேலை மற்றும் அரிசி ஆகியவை சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.அதாவது, வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்கள் குடிசை ஒன்றுக்கு 5,000 ரூபாய் மற்றும் சிறப்பு நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 10,000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை பெறுவர். நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானோர் 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை நிவாரணமாக பெறுவர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணிகளை உடனடியாக துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்புகள் முடிந்தவுடன் இவை இன்னும் ஒரு சில தினங்களில் வழங்கப்படும்.
கால்நடை இழந்தவர்கள்:
கால்நடை இழந்தோருக்கு, கால்நடை இழப்பிற்கு 30,000 ரூபாய், ஆடு மற்றும் பன்றி இழப்பிற்கு 3,000 ரூபாய் மற்றும் கோழி இழப்பிற்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
பயிர் இழப்பீட்டுத் தொகை:
மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை கணக்கெடுக்கும் பணியினையும் விரைந்து முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பின் அடிப்படையில், 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமுற்ற நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500/- ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410/- ரூபாய்; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000/- ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்கப்படும்.
மேற்காணும் இழப்பீட்டுத் தொகையானது சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த நிவாரணத் தொகையை விவசாயிகள் கடனுக்கு நேர் செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
95% மின் விநியோகம் சீரானது:
சென்னையில் 95% இடங்களில் மின் விநியோகம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும், இன்னமும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டவில்லை. வெள்ள நீர் வடிந்த பின்னர் இந்த இடங்களில் மின் விநியோகம் சீர் செய்யப்படும்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை:
சென்னை மாநகராட்சியில் வெள்ளம் வடிந்த இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக மாநகராட்சி துப்புரவுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
வெளிமாவட்டங்களிலிருந்து 2,000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிப் பகுதியில் தற்பொழுது 25,000 துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குப்பைகளை விரைந்து அகற்றும் பொருட்டு மேலும் 5,000 துப்புரவுப் பணியாளர்கள் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுவர்.
மேலும், தேவைக்கேற்ப சென்னை மாநகரத்தில் துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அவர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வழங்கப்படும். இந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்ற விரும்புவோர் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்கள் கடந்த பல நாட்களாக குப்பைகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.
நிவாரண பொருட்களை அனுப்பலாம்:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு, குடிநீர் என நிவாரணங்கள் வழங்கி வருகிறது. இந்திய கப்பற்படையினைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் விசாகப்பட்டினத்திலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வந்துள்ளன. அவை அனைத்தும் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பல தொண்டு நிறுவனங்ளும், தனியார் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி உள்ளனர். பல தன்னார்வ அமைப்புகள் நிவாரணப் பொருட்கள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், இதற்கென ஏற்பட்டுத்தப்பட்டுள்ள மையத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிதியுதவி அனுப்பலாம்:
மேலும், பல தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் வெள்ள நிவாரணத்துக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு நிதி உதவி செய்ய விரும்புவோர் CHIEF MINISTERS PUBLIC RELIEF FUND என்ற பேரில் காசோலை/ வரைவோலை (டிடி) மூலம் நிதித்துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது நிதித் துறை இணைச் செயலாளரை நேரில் சந்தித்தும் வழங்கலாம்.
தற்போது வெள்ள பாதிப்பு நிலைமை சீரடைந்து வருகிறது. இன்னும் ஒரிரு தினங்களில் நிலைமை முற்றிலும் சீரடைந்து விடும்.
மாற்று ஆவணங்கள் வழங்க ஏற்பாடு:
வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள்:
இதற்காக சிறப்பு முகாம்கள் வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வருகின்ற 14.12.2015 முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்முகாம்களில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர்.
சிறப்பு முகாம்களில் மட்டுமன்றி, பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம். தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 57(5)-ன்படி, இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்/வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும் மூல ஆவணங்களாகக் கருதப்படும்.
ஆட்டோ ஒட்டுநர்கள் பலர் ஒட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகனப் பதிவுச் சான்று ஆகியவற்றை இந்த மழை வெள்ளத்தால் இழந்துள்ளனர். இந்த ஆவணங்களும் இதே நடைமுறைப்படி வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5000/-ம், குடும்பத்திற்கு 10 கிலோ அரிசியும் வழங்க ஏற்கெனவே ஆணையிட்டதன் அடிப்படையில் இந்த நிவாரண உதவிகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன" இவ்வாறு தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.