வானியல் அறிவோம்: மீண்டும் கோள் ஆகிறதா புளூட்டோ?
அறிவியலிலும் சரி மற்ற துறைகளிலும் சரி பிரம்மாண்டமான, பெரிய விஷயங்கள்தான் நம் கவனத்தைக் கவர்கின்றன; தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்துவிடுகின்றன. ஆனால், இந்த ஆண்டு, நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் சூரியக் குடும்பத்தின் விளிம்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ஒரு குட்டிப் பையனும் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்துவிட்டான்: அதுதான் குறுங்கோள் புளூட்டோ.
ஒன்பது ஆண்டுகள், முன்னூறு கோடி மைல்கள் பயணத்துக்குப் பிறகு இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் நியூ ஹொரைசன் கலம் மணிக்கு 30 ஆயிரம் மைல்கள் வேகத்தில் புளூட்டோவுக்கு அருகில் கடந்து போனது. அப்போது புளூட்டோவின் அற்புதமான புகைப்படங்களையும் தரவுகளையும் அனுப்பியது; இன்னும் அனுப்பிக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அதிக அளவு துல்லியமான புகைப்படங்கள் இப்போதுதான் கிடைக்கின்றன, அதாவது புளூட்டோவை நியூ ஹொரைசன் குறைந்த கால அளவிலேயே தரிசித்து 5 மாதம் ஆனதற்குப் பிறகு.
அளவு முக்கியமா?
மறுபடியும் புகழ் வெளிச்சத்துக்கு புளூட்டோ வந்திருக்கிறது! அமெரிக்க வானியலாளர் கிளைடு டாம்போவால் 1930-ல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து 2006 வரை புளூட்டோ ஒரு கோளுக்குரிய அந்தஸ்துடன்தான் இருந்தது. ஆனால், 2006-ல் சர்வதேச வானியலாளர் ஒன்றியம் புளூட்டோ கோள் இல்லை அது ஒரு குறுங்கோள்தான் என்று தகுதி நீக்கம் செய்தது. சூரியக் குடும்பத்தின் எல்லைப் பகுதியில் புளூட்டோவின் அளவையொத்த புதுப்புது விண்பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதால், அவற்றுக்கு ‘கோள்’ அந்தஸ்து கொடுக்க வேண்டிய நிலையைத் தவிர்ப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புளூட்டோவை ‘பதவி இறக்கம்’ செய்தது குறித்துப் பலரும் கோபத்துடன் எதிர்வினையாற்றினார்கள். முன்னணி விஞ்ஞானிகளை ‘இதயமற்றவர்கள்’ என்று பள்ளிக் குழந்தைகள் சித்தரித்தனர். வானில் உள்ள நாய்க்கூண்டில் புளூட்டோவை சிறைவைத்துவிட்டார்கள் என்று நகைச்சுவையாளர்கள் கிண்டலடித்தனர். கிளைடு டாம்போவின் விதவை மனைவி, அவருடைய மகன் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள், டாம்போ பேராசிரியராகப் பணிபுரிந்த நியூ மெக்ஸிகோ மாகாணப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ‘அளவு என்பது முக்கியமல்ல’ என்ற பதாகைகளையும் சிலர் ஏந்தியிருந்தனர்.
திரும்பி வரும் புளூட்டோ
சர்வதேச வானியலாளர் ஒன்றியத்தின் புது வரையறையை ஏற்க மறுத்து, ‘புளூட்டோ ஒரு கோள்தான்’ என்று வலியுறுத்தித் தீர்மானங்களும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் இயற்றப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தின் சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் இன்னும் ஒரு படி மேலே போய் நாட்டுப்பற்றுக்கான அறைகூவலை விடுத்தது. கோள்களைக் கண்டுபிடித்த வானியலாளர்களிலேயே பேராசிரியர் டாம்போ மட்டும்தான் அமெரிக்கர் என்ற விஷயத்தை அந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டியது.
ஆனால், இந்த ஆண்டின் அமெரிக்கக் கோடைக் காலத்தின்போது (ஜூன் ஆகஸ்ட்) அந்தக் கவலைகளெல்லாம் மறந்துபோயின; புளூட்டோ வஞ்சத்துடன் திரும்பி வந்திருக்கிறது. நியூ ஹொரைசன் அனுப்பிய புளூட்டோவின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் புளூட்டோவை மங்கலான ஒளிப்புள்ளி என்ற நிலையிலிருந்து தனித்துவ அடையாளம் கொண்ட முழுமையான ஒரு உலகம் என்ற நிலைக்குக் கொண்டுசென்றிருக்கிறது.
ஆங்காங்கே பள்ளங்களைக் கொண்டிருக்கும் விரிந்த சமவெளிகள், பாயும் பனியாறுகள், பெரும் பிளவுகள், புளூட்டோவின் ஐந்து நிலவுகளில் பெரியதான சாரோன் நிலவில் காணப்படும் கண்டத்தட்டுகளின் விளிம்புகள் போன்ற விதவிதமான புவியியல் நிகழ்வுகளின் அணுக்கப் புகைப்படங்களை (Close-up) பற்றி ஒரே மூச்சில் விவரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நியூ ஹொரைசன் அனுப்பியிருக்கும் தரவுகளை கோளியல் விஞ்ஞானிகள் இன்னும் பல பத்தாண்டுகள் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள்; எனினும் ஆரம்ப கட்டக் கண்டறிதல்கள் சிலவற்றை அவர்கள் வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு கணிக்கப்பட்டதைவிட புளூட்டோ சற்று பெரியது என்றும் சற்று அடர்த்தி குறைவானது என்றும் தெரியவருகிறது.
ஆகவே, நெப்டியூனுக்கு அப்பால் உள்ள சூரியக் குடும்ப விண்பொருட்களிலேயே மிகப் பெரியது புளூட்டோதான் என்றாகிறது, குறைந்தபட்சம் தற்போதைக்கேனும். மேலும் சில விஷயங்கள் தெரியவந்திருக்கின்றன. புளூட்டோவின் வானத்தில் பரந்து விரிந்த மேகப் படலங்கள் காணப்படுகின்றன; அவற்றில் அசட்டிலீன், எத்திலீன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அயனி வாயு மேகமொன்று அந்தக் குறுங்கோளைப் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பின்தொடர்கிறது; ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் புளூட்டோவின் வளிமண்டலத்தை சூரியக் காற்று கொஞ்சம் கொஞ்சமாக உரித்துக்கொண்டிருக்கிறது.
பனி எரிமலைகள்
புளூட்டோவின் சில இயல்புகளை மற்ற கோள்களின் இயல்புகளைவிட எளிதில் புரிந்துகொள்ளலாம். புளூட்டோவின் மேற்பரப்பு சிவப்பாகத் தெரிவதற்கு ஹைட்ரோகார்பன் சேர்மானங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆனால், புளூட்டோவின் நிலவுகளின் விசித்திர இயல்புகளை எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை. விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் அந்த நிலவுகள் சுழலவும், சீரற்று நகரவும் செய்கின்றன.
ஏற்கெனவே கண்டறியப்பட்ட ஐந்து நிலவுகள் தவிர புதிதாக எதையும் நியூ ஹொரைசான் கலம் கண்டுபிடிக்கவில்லை என்பதும் பலருக்கும் ஆச்சர்யம். இதற்கிடையில், புளூட்டோவின் மலைகளெல்லாம் ‘பனி எரிமலை’களாக இருக்கக் கூடும் என்று சொல்லக்கூடிய ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த எரிமலைகள் தீக்குழம்புகளை அல்ல, உறைபனியையும் மற்ற பொருட்களையும் துப்பு கின்றன என்று அந்த ஆதாரங்கள் சுட்டுகின்றன.
புளூட்டோவின் பதவி இறக்கத்தை எண்ணி வருந்தியவர்களைப் பொறுத்த வரை இப்போது புளூட்டோ திருப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறது என்றே அர்த்தம். நியூ ஹொரைசனின் தரவுகள் ஏற்படுத்தும் வியப்பு மறுக்க முடியாதது.
சூரியப் பின்னணியில் நிழலுருவாக புளூட்டோ தெரியும் புகைப்படம் ஒன்றை நியூ ஹொரைசான் எடுத்திருக்கிறது. உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியமற்றதும், மேடுபள்ளமானதுமான புளூட்டோவின் மேற்பரப்பையும் வளிமண்டல அடுக்குகளின் படலங்களையும் சூரிய ஒளி ஊடுருவும் அற்புதமான புகைப்படம் அது. புளூட்டோவின் அடையாளச் சிக்கல் குறித்து புலம்புவதை விடுத்து இப்போது அதன் தோற்றத்தின் ஜாலங்களின் மீது கவனம் செலுத்துவதற்கு இதுபோன்ற புகைப்படங்கள் நமக்கு உதவட்டும்!
- ராய் ஜெயவர்தன,
கனடாவின் டோரண்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின்
அறிவியல் துறைத் தலைவர்.
கனடாவின் டோரண்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின்
அறிவியல் துறைத் தலைவர்.
© தி நியூயார்க் டைம்ஸ்,